அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டங்களை மீறிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இ- காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய சந்தையில் தவிர்க்கமுடியாத முக்கிய நிறுவனங்களாக உள்ளன. இந்த வெளிநாட்டு இ- காமர்ஸ் நிறுவனங்கள், தங்களது சொந்த உற்பத்திப் பொருட்களை இணையதளங்கள் மூலம் விற்பனை செய்வதற்கு இந்தியாவில் தடை உள்ளது.
ஆனால் வால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் இந்த தடையை மீறி தங்களது சொந்த உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார்கள் அடிப்படையில் அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது.
அவ்வாறான சோதனையின்போது நிறுவனங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக மூத்த அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் செயல் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டத்தை மீறி இருப்பது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.