காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 13-ஆவது மாநாடு வியாழக்கிழமை அன்னவாசலில் நடைபெற்றது. மறைந்த எம்.முத்துராமலிங்கன், எம்.உடையப்பன் ஆகியோர் நினைவரங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார்.
தோழர் எம்.செபஸ்தியான் நினைவாக கொண்டு வரப்பட்ட கொடியை மூத்த நிர்வாகி பெரி.குமாரவேல் ஏறினார். எம்.வீரமணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழுத் தலைவர் கே.சண்முகம் வரவேற்றார். மறைந்த ப. சண்முகம், எம்.முத்துராமலிங்கம், பி.வீராசாமி, தியாகி சண்முகம் ஆகியோர் நினைவாக கொண்டு வரப்பட்ட ஜோதியை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.
மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உரையாற்றினார். மாவட்ட செய லாளர் எஸ்.பொன்னுச்சாமி, பொருளாளர் சி.சுப்பிரம ணியன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர்.
மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.சுசீலா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல் ஆகியோர் பேசினர்.
புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில செயலாளர் சாமி.நடராஜன் நிறைவுறையாற்றினார். மாநாட்டில் தலைவராக எஸ்.பொன்னுச்சாமி, செயலாளராக அ.ராமையன், பொருளாளராக எம்.பாலசுந்தரமூர்த்தி, துணைத் தலைவர்களாக ஆர்.சி.ரெங்கசாமி, சி. சுப்பிரமணியன், வீரமணி, நாராயணமூர்த்தி, துணைச் செயலாளர்களாக த.அன்பழகன், நாராயணசாமி, தமிழரசன், பாண்டியன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாக்களும் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணமேல்குடி தாலுகாக்கள் முழுமையாகவும் கரம்பக்குடி தாலுகாவில் 11 ஊராட்சிகளின் கந்தர்வகோட்டை தாலுகாவில் 2 ஊராட்சிகளும் காவிரி கால்வாய் பாசனப் பகுதிக்குள் வருகிறது. இந்தப் பகுதியை டெல்டா மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமனை கேட்டு மனு கொடுத்து காத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து மனைப்பட்டா வழங்க வேண்டும். மத நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாய செய்து வரும் விவசாயிகளை குத்தகை பதிவு செய்ய வேண்டும்.
புறம்போக்கில் இறால் பண்ணை அமைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள அனைவருக்கும் இழப்பீட்டிற்கு ஏற்ப காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி வரத்து வாரிகளை தூர்வாரி நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.