புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலங்களில் மொத்தம் 335 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 704 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. புதன்கிழமை மாலை இந்தச் சிலைகள் அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டு, மூன்று நாட்களாக சிறப்புப் பூஜைகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை நகரில் புதுக்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. புதன்கிழமை இரவில் இருந்தே சில இடங்களில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாள்களில் மாவட்டம் முழுவதும் 115 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட் டுள்ளன. மூன்றாம் நாளான வெள்ளிக் கிழமை இரவு வரை 355 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
புதுக்கோட்டை நகரில் திலகர்திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் மாலை 6 மணி முதல் தொடங்கின. அனைத்து சிலைகளும் புதுக்குளத்திலேயே கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலம் இரவு 11 மணி வரை நீடித்தது
விநாயகர் ஊர்வலத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக்கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.