தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேஷன் மற்றும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற 48 -ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் அணி அதிக புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
தமிழ்நாடு சூட்டிங் அசோசியேசன் மற்றும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து 48 -ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிப்பட்டி புதுக்கோட்டை மகாராஜா சூட்டிங் ரேஞ்சில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் சிங்கிள் ட்ராப், டபுள் டிராப், ஸ்கிப் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
செப்- 1 முதல் தொடங்கிய இந்த போட்டியானது தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்றது . நிறைவு நாள் விழாவில் புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலர் கருப்புசாமி மற்றும் நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணி மற்றும் தனி நபர் பிரிவில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வழங்கினர். இதில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
இதில், மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனின் மகளும் துப்பாக்கி வீராங்கனையுமான ஆந்த்ரா, ட்ராப் ஜூனியர் பெண்கள் தங்கம், ட்ராப் சீனியர் பெண்கள் வெண்கலம், பெண்கள் ட்ராப் அணி தங்கம் மற்றும் மிக்ஸ்டு ட்ராப் அணி வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்..