Close
நவம்பர் 22, 2024 4:10 காலை

முதலமைச்சரின் புதுமைப் பெண் திட்டம் தொடக்கம்: அமைச்சர் ரகுபதி பங்கேற்று உதவித்தொகை வழங்கல்

புதுக்கோட்டை

தமிழ்நாடு முதலமைச்சர் ‘புதுமைப் பெண்” திட்டத்தினை துவக்கி வைத்ததை முன்னிட்டு,  புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்துகொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  ‘புதுமைப் பெண்” திட்டத்தினை சென்னையில் துவக்கி வைத்ததை முன்னிட்டு, காணொலிக் காட்சி வாயிலாக புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்” திட்டத்தினை துவக்கி வைத்தார்.

ஒரு சமூக வளர்ச்சியின் முகவரி என்பது அச்சமூகத்தில் பெண்களின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. மேலும் மாநிலத்தின் முன்னேற்றம், அம்மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மகளிரின் நலத்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் மகளிரின் நலன் காத்து அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க முன்னுரிமை அளித்து வருகிறார். முதலமைச்சர் மகளிரின் முன்னேற்றத்திற்காக பல புதிய முன்னோடி நலத்திட்டங்களை உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு,  பட்டப்படிப்பு,  தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000  தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
இத்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் 588 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டை உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலர், நிதி விழிப்புணர்வு கையேடுகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top