Close
நவம்பர் 22, 2024 1:38 காலை

ஈரோட்டில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணி தொடக்கம்

ஈரோடு

ஈரோட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணி மாநகராட்சி மேயர் நாகரெத்தினம் தொடக்கி வைத்தார்

ஈரோட்டில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் தொடக்கி வைத்தார்.

ஈரோடு, செப். 8: ஈரோடு மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியினை மேயர் நாகரத்தினம் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சி 50 -ஆவது வார்டுக்கு உட்பட்ட காசிபாளையம் பகுதியில் ரங்கன்பள்ளம் உள்ளது. இங்கு கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர், மழை நீரையும் சேமிக்கும் வகையில் ஏற்கனவே தற்காலிக மண் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையை தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தில் கான்கிரீட் தடுப்பணையாக கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நமக்கு நாமே திட்டத்தில் மாநகராட்சியின் நிதி ரூ.26.70 லட்சம், ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் நிதி ரூ.27.80 லட்சம் என மொத்தம் ரூ.54.50 லட்சம் மதிப்பீட்டில் 2.15 ஏக்கர் பரப்பளவில் புதிய கான்கிரீட் தடுப்பணை கட்டும் பணி தொடக்க விழா  புதன்கிழமை நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை வகித்து, பணியினை துவக்கி வைத்தார்.  ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் செயலாளர் கணேசன், நீர் மேலாண்மை குழு தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் வெங்கடேஸ் வரன், இணை செயலாளர் ராபின், எஸ்.கே.எம். சிவக்குமார், உதவி தலைவர் வேல்முருகன், ஆர்.ஜி.சுந்தரம், ஆர்.ஆர்.சத்திய மூர்த்தி, மாநகராட்சி உதவி ஆணையர் விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் சின்னசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் நீர் நிலைகள், குடிநீர் மற்றும் விவசாய ஆதாரங்களை மேம்படுத்திட என்ற நோக்கத்தில் ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் மூலம் குளம், குட்டை, தடுப்பணை, ஓடை, ஏரி, கால்வாய் போன்ற நீர் நிலைகளை தூர்வாரி, ஆழப்படுத்தி அதிகளவில் நீரைதேக்கும் பணிகளை செய்து வருகிறோம்.

இதுவரை எங்களது ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் 49 பணிகளை நிறைவு செய்துள்ளோம். தற்போது, 50 -ஆவது பணியாக காசிபாளையம் ரங்கன்பள்ளத்தில் எங்களது அமைப்பு சார்பில் ஏற்கெனவே இருந்த மண் தடுப்பணையை, மாநகராட்சியோடு இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் கான்கிரீட் தடுப்பணையாக கட்டும் பணியை தொடக்கி வைத்துள்ளோம். இந்த தடுப்பணையில் 1 கோடி லிட்டா் தண்ணீர் தேக்கப்படும். இதன்மூலம் 35 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், 7,200 குடும்பத்தினர் குடிநீர் ஆதாரத்தை பெறுவார்கள் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top