சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா அருகே உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ஒழித்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒன்றாக இணைந்துள்ள CPS ஒழிப்பு அமைப்பினர் பல்வேறு கட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நற்பவி கோ.தெ.கார்த்திகேயன் தலைமையில் (9.9.2022) புதுக்கோட்டையில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது போல தமிழகத்திலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் .
திமுகவின் தேர்தல் கால வாக்குறுதிப்படி தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் பணிபுரியும் சிபிஎஸ் திட்ட பணியாளர்களுக்கு வழங்குவது போன்று தமிழகத்தில் உள்ள திட்ட ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் எஸ். நாகராஜன், தமிழ்நாடு ஓய்வூதியதாரர் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி. கோவிந்தசாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
போராட்டத்தை அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலர் கி. நாகராஜன் தொடக்கி வைத்தார். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கி. புகழேந்தி விளக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் நா. தமயந்தி, பா. முருகபிரசாத், சே. விஜயலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவரித்துறை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலர் எஸ். ஜெயராஜேஸ்வரன் நிறைவுரையாற்றினார்.
முன்னதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர்க.குமார் வரவேற்றார். பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாவட்டச்செயலர் கே.ஆர். ஹரிஹரன் நன்றி கூறினார்.
வலுக்கும் போராட்டம்…
CPS திட்டத்தை தமிழகத்தில் 2003 -ஆம் ஆண்டில் அமல்படுத் திய பின்பு 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் இரண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.
2006 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் CPS திட்டத்தை ரத்து செய்வோம் என திமுக மற்றும் அதிமுக வாக்குறுதி அளிக்கவில்லை. 2016 -ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற 10 நாள் வேலை நிறுத்தத்தின் விளைவால் 2016 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என்று திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வாக்குறுதி அளித்தன.
2016 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக போராடிய தால் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்திட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
எனவே வேலை நிறுத்தம் செய்தால் CPS திட்டத்தை நிச்சயம் இரத்து செய்ய முடியும். தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தில் இணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இப்போராட்டத்தின் மூலம் அறைகூவல் விடப்பட்டது.