Close
நவம்பர் 22, 2024 12:08 மணி

திருவொற்றியூரில் 216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

சென்னை

திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கிய சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி. உடன் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

திருவொற்றியூரில் 216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி வழங்கினார்.

திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிக ளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் திருவொற்றியூர் அரசு ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது.

இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை,  வருவாய்த் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட தொழில் மையம், ஆவின், மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், தாட்கோ, முன்னோடி வங்கிகளின் மேலாளர்கள், எல்காட், காவல் துறை மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவியை பெறுவதற்கான 216 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இம்முகாமை சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். அமிர்தஜோதி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை,  தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, வங்கி கடன் மானியம்,  ஆவின் உதவி உபகரணங்கள், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை,  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு உள்ளிட்டவைகள் வழங்கினார்.

மேலும் நவீன மூன்று சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர வண்டிகள், காதொலி கருவிகள் உள்ளிட்டவைகளை ஆட்சியர் வழங்கினார். முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு அதிநவீன செயற்கை உறுப்புகளை வழங்குவதற்கான அளவீடு மேற்கொள்ளப்பட்டு  மேலும் 9 மாற்றுத் திறனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு அட்டை பெறுவதற்கான விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில்  வருவாய் கோட்டாட்சியர் ரெங்கராஜன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீ.குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீ.ராமநாதன், மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top