உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வினை 40 % லிருந்து 50 % உயர்த்த வேண்டும் என்றார் மாநிலத் தலைவர் பொ.அன்பரசன்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் மீனா மஹாலில் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூடத்தின் இயக்கச் செயல்பாடுகள் பற்றி மாநிலப் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து பேசினார். நிதியும் பொது நிகழ்வும் பற்றி மாநிலப் பொருளாளர் இளங்கோ பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத் தலைவர் பொ.அன்பரசன் பேசியதாவது: உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் 40 % லிருந்து 50 % உயர்த்தி மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் பதவி உயர்வு பணிமாறுதல் மற்றும் பணி நிறைவு காரணமாக காலி ஏற்படும் போது அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள மூத்த உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட வேண்டும்.
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப் பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமைப் பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
2018 ஆம் ஆண்டு வரை 5:2 என்ற நடைமுறையில் இருந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கடந்த 2 ஆண்டுகளாக 7:2 என மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையிலிருந்த 5:2 என்ற விகிதாச்சாரத்திலேயே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட அலுவலகத்தில் உள்ள உதவி திட்ட அலுவலர் பணியிடத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தனி ஊதியம் ரூ 2 ஆயிரத்திற்கு அகவிலைப்படி வழங்க வேண்டும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் களாக உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கள் நியமனம் செய்யும் பொழுது பணிமூப்பு அடிப்படை யிலேயே நியமனம் செய்ய வேண்டும். அனைத்து உயர்நிலைப் பள்ளியிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் துப்புரவாளர் மற்றும் இரவுக் காவலர்களை உடனே நியமிக்க வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.
பள்ளிகளில் சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழா வில் கொடி ஏற்றுபவர் யார் எனபதையும் அரசாணை மூலம் வெளியிட வேண்டும். 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் கோவிட் 19 தொற்று காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களே வர இயலாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களிடமிருந்து பெற்றோர் ஆசிரியர் கழக நிதி பெறுவதிலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்கு பதிலாக பதிலி ஆசியர்களை நியமனம் செய்ய வேண்டும்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்மினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை கொண்டு வர வேண்டும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தேர்வுக் குழுவில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படல் வேண்டும்.கடந்த அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தினையும் கடந்த 1.1.2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப் படி நிலுவைத் தொகையினையும் உடனே வழங்க வேண்டும் என்றார்.
பொதுக்கூட்டத்தில் இயக்கப் புரவலர்கள் மற்றும் ஆலோசகர்களான மேனாள் பொதுச்செயலாளர் அருள் சுந்தரராஜன் , மேனாள் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, மேனாள் பொதுச் செயலாளர் நடராஜன், மேனாள் தலைவர் பீட்டர் ராஜா, மாநிலத் துணைத்தலைவர்கள், மாநில சட்டச் செயலாளர்கள், மாநில தலைமை நிலையச் செலாளர்கள், மாநில மகளிர் அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 500 க்கும் மேற்பட்ட உயர்நிலை,மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.