திருமயம் அருகே உள்ள குலமங்கலத்தில் அருள்மிகு மது உடைய பராசக்தி கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ஏராளமான பெண்கள் முளைப்பாரியுடன் வந்து வழிபாடு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குலமங்கலத்தில் அருள்மிகு மது உடைய பராசக்தி கோவில் தேரோட்டம் கடந்த 23 வருடங்களுக்குப் பிறகு தேரோட்டம் இந்த ஆண்டில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை முன்னிட்டு கடந்த 13 -ஆம் தேதி அன்று காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொறு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்கள் அந்தந்த பகுதியில் தங்களுடைய வீட்டு முன்பு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று புதன்கிழமை மாலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மா பலா வாழை உள்ளிட்ட முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் மேல தாளம்அதிர்வேட்டு முழங்க மாலை பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலில் உள்ள நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிலை நின்றது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் மதுக்குடம் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினார்கள் தேரோட்டத்தில் 18 பட்டி கிராமத்தார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாக்குழுவினர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.