Close
செப்டம்பர் 20, 2024 4:42 காலை

என்ஐஏ- நடவடிக்கையை கண்டித்து புதுக்கோட்டையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கூடிய பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ஐஏ – நடவடிக்கையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் இன்று அதிகாலை 3.30 மணிமுதல் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி, அசாம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் சில மணிநேரத்தில் சோதனை நிறைவுபெற்றது.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைதாகி இருக்கிறார்கள். கர்நாடகா, மராட்டியம் மாநிலங்களில் தலா 20 பேர் கைதாகி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமில் 9 பேர், உத்தரபிரதேசத்தில் 8 பேர், ஆந்திராவில் 5 பேர், மத்திய பிரதேசத்தில் 4 பேர், புதுச்சேரி, டெல்லியில் தலா 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைதான 106 பேரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழகத்தில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவில் உள்ள பண்பொழி கிராமத்தில் வசித்து வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் இன்று அதிகாலை 3 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அவர் பாப்புலர் பிரண்ட் அமைப்பில் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய குழு உறுப்பினராக உள்ளார். அவ்வப்போது பண்பொழி  வீட்டிற்கு வந்து செல்வார் இன்றைய சோதனை யின் போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் அதிகாலை வந்த 30 -க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரது வீட்டில் அவரது தந்தை, சகோதரன் மற்றும் மனைவி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்

குறிப்பாக, இவரது வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது தேசிய புலனாய்வு முகமையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனையின் போது, சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் பிரச்சனை செய்ய கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய தொழில்பதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்புடன் 30க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தினர்.

இந்த  சோதனையைக் கண்டித்து  தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கூடிய பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ஐஏ – நடவடிக்கையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top