தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் பரிமாற்ற குழுமம் வழிகாட்டுதலுடன் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தும் 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
இப்பயிற்சியை பெற்ற ஆசிரியர்கள் மூன்று மாதங்கள் ஆய்வு செய்யும் அவரவர் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவார்கள். பின்னர் நடத்தப்பெறும் மாவட்ட அளவிலான மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் மாணவர்களின் ஆய்வு அறிக்கைகளில் இருந்து சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு குழந்தை விஞ்ஞானிகள் என்ற விருது வழங்கப்படும்.
இவ்வாறு இந்திய அளவில் குழந்தை விஞ்ஞானிகள் விருது பெறும் மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர்களோடு இந்தியாவின் அனைத்து விஞ்ஞானிகளும் பங்கு பெறும் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கு பெறக்கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.
இம்மாநாட்டில் நமது குடியரசு தலைவர் அல்லது பிரதமர் கலந்துகொண்டு விருது பெறுபவர்களை பாராட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஆய்வு செய்யவுள்ள மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சு.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் இடைநிலை கல்வி நேர்முக உதவியாளர் க.ராசு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் ஒரு ஆய்வறிக்கையாவது செய்து மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை, புதுமை சிந்தனை, படைப்பாற்றல், தலைமைப் பண்பு போன்ற திறன்கள் வளர்வதற்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. இராமதிலகம் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். ஆரோக்கியம் மற்றும் நல்வாழ் விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்ளு தல் எனும் மையக்கருப்பொருளை அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன் அறிமுகப்படுத்தி பேசினார்.
சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சார்ந்தும், தரமான ஆய்வு கட்டுரைகளை தயாரிக்கும் வழிமுறைகள் சார்ந்தும் முதுநிலை விஞ்ஞானி முனைவர் ஆர்.ராஜ்குமார் பேசினார்.
சுற்றுச்சூழல் அமைப்பை அறிந்து கொள்ளுங்கள், ஆரோக்கியம் ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வை வளர்ப்பது, சமூக கலாச்சார நடைமுறைகள், தற்சார்பு அணுகுமுறைகள் என்ற உபதலைப்புகளில் கருத்தாளர்கள் க.ஜெயராம், ஆ.மணிகண்டன், மா.குமரேசன், எஸ்.மணிகண்டன், பகவதி ஆகியோர் பேசினர்.
பயிற்சி முகாமை நிறைவு செய்தும், அறிவியல் இயக்கம் செய்துவரும் பணிகள் குறித்தும் மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன் பேசினார். இப்பயிற்சியில் குழந்தைகள் நலக்குழு தலைவர் க.சதாசிவம், அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ம.வீரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்றார். நிறைவாக மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் சி.ஷோபா நன்றி கூறினார்.