Close
நவம்பர் 22, 2024 5:38 மணி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு அறந்தாங்கியில் பயிற்சி

புதுக்கோட்டை

மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் இன்று அறந்தாங்கி அரசு (ஆண்கள்) மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.தெய்வக்கனி தலைமையில் நடந்தது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அறந்தாங்கியில் நடைபெற்றது

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் பரிமாற்ற குழுமம் வழிகாட்டுதலுடன் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தும் 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு அறந்தாங்கியில் நேற்று பயிற்சியளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை பெற்ற ஆசிரியர்கள் மூன்று மாதங்கள் ஆய்வு செய்யும் அவரவர் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவார்கள். பின்னர் நடத்தப்பெறும் மாவட்ட அளவிலான மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் மாணவர்களின் ஆய்வு அறிக்கைகளில் இருந்து சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு குழந்தை விஞ்ஞானிகள் என்ற விருது வழங்கப்படும்.

இவ்வாறு இந்திய அளவில் குழந்தை விஞ்ஞானிகள் விருது பெறும் மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர்களோடு இந்தியாவின் அனைத்து விஞ்ஞானிகளும் பங்கு பெறும் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கு பெறக்கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.

இவ்வாறு ஆய்வு செய்யவுள்ள மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அறந்தாங்கி அரசு (ஆண்கள்) மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.தெய்வக்கனி தலைமையில் நடந்தது.

அறந்தாங்கி கோட்டாட்சியர் எஸ். சொர்ணராஜ் பயிற்சியை தொடக்கி வைத்து.  ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு ஆய்வாளர்களாக உருவாக்குவது என்பது குறித்து பேசினார். அப்போது அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையோடு இளம் விஞ்ஞானிகளாக வளர்வதற்கு வழிகாட்டி உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. இராமதிலகம் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். ஆரோக்கியம் மற்றும் நல்வாழ் விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்ளுதல் எனும் மையக் கருப்பொருளை அறிவியல் இயக்க மாநில செயலா ளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி பேசினார்.
சென்னை ஐஐடி -யின் தொழில் நுட்ப உதவியாளர் அ.சிவசந்தோஷ் தன்னுடைய சர்ஜிகல் ரோபோட் சார்ந்தும், ஆய்வு கட்டுரைகளை தயாரிக்கும் வழிமுறைகள் சார்ந்தும் பேசினார்.

சுற்றுச்சூழல் அமைப்பை அறிந்து கொள்ளுங்கள், ஆரோக்கி யம் ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வை வளர்ப்பது, சமூக கலாச்சார நடைமுறைகள், தற்சார்பு அணுகுமுறைகள் என்ற உபதலைப்புகளில் கருத்தாளர்கள் மா.குமரேசன், சி.ஷோபா, ஆ.செல்வராஜ், செ.இளையராஜா ஆகியோர் பேசினர்.

அறிவியல் இயக்கம் கல்வியிலும், மக்கள் மத்தியிலும் செய்து வரும் பணிகள் குறித்து அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் பேசினார்.பயிற்சி முகாமை நிறைவு செய்து அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ம.வீரமுத்து பேசினார்.

முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் க.ஜெயராம் வரவேற்றார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் நாகூர்கனி, பா.கார்த்திக், உதவி தலைமை ஆசிரியர்கள் ஆரோக்கிய மெர்சி, இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக ஒன்றிய அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் எம்.கணேசன்  நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top