Close
நவம்பர் 22, 2024 6:12 மணி

பொன்னியின் செல்வன் – திரைப்பட முன்னோட்டம்… இங்கிலாந்திலிருந்து சங்கர்…

சினிமா

பொன்னியில் செல்வன் முன்னோட்டம்

செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி (2022) அன்று, பொன்னியின் செல்வன் (முதல் பாகம்) படம் திரையரங்குகளுக்கு வருகிறது.
கல்கியின் தமிழ் இலக்கிய வாசகர்கள் தாங்கள் அனுபவித்து வாசித்த புதினம் எப்படி திரைப்படமாக வந்திருக்கிறது என்கிற எதிர்பார்ப்போடும், சினிமா விமர்சகர்கள் தங்களது விமர்சன கோடாரிகளை கூர் தீட்டி கொண்டும், மணிரத்னத்தின் ஆதர்ச கலா ரசிகர்கள் கண் விழித்து கொண்டும்.., காத்து கிடப்பது நாம் எல்லோரும் அறிந்த செய்திதான்.

புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என்கிற ஐந்து பாக புத்தகத்தை எப்படி இரண்டரை மணி நேரத்தில், கண் முன் கொண்டு வர இயலும்.. யானையை பானையில் அடைப்பது போல தான். மணிரத்னம் மற்றும் படக்குழுவினருக்கு சவால்கள் நிறைந்த பணி தான்.

படம் வருவதற்குள் பொன்னியின் செல்வன் கதையை, ஏற்கனவே அறிந்தவர்கள் ஒரு முறை ‘மீள் பார்வை’ செய்து கொள்கிறார்கள், இதுவரை கதையைப் படிக்காதவர்கள் புத்தகம் வாங்கி படிக்கிறார்கள், ஒலி வடிவில் கதையைக் கேட்கிறார்கள், கதைச் சுருக்கத்தை வலையொளியில் தேடுகிறார்கள். ஒரு புதினம் திரைப்படமாக வருவது தமிழ் திரையுலகில் முதல் முறையல்ல ஆனால் இத்தகைய தேடல்களை, இதுவரை எந்த படைப்பும் தந்ததில்லை.

இராஜராஜ சோழன் என்ற மகாராஜா எவ்வாறு உருவாகினான் என்பதை சொல்லும் கதை. அவன் பிறப்பு, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, உறவினர்கள், சோழ நாட்டு அதிகாரிகள், ஈழத்து உடனான அவன் தொடர்பு, அன்றைய புத்த மதம், சைவ, வைணவ சமயச் சண்டைகள், பாண்டியர் களின் அன்றைய நிலை, ராஜ குடும்ப பெண்களின் அறிவு, பக்தி உள்ளிட்டவை கற்பனைக் கதாபாத்திரங்களையும் சேர்த்து மிக அருமையான நடையில் கல்கி அவர்களால் எழுதப்பட்ட புதினம் பொன்னியின் செல்வன்.

சோழர்கள் வரலாற்றை மையமாக கொண்ட இந்த கதை வாசகர்களுக்கு கிடைத்த ஒரு அற்புத இலக்கியம். எளிமையான நடையும், கதாப்பாத்திரங்களும் எத்தனை காலத்திற்கு பின் எடுத்து படித்தாலும் ஒரு பெரும் பிரமிப்பை தரக்கூடியது.

வரலாற்றை அதன் நுணுக்கங்கள் பிசிராமல் ஒவ்வொரு காட்சியையும் தன் நடையில் சொல்லி சென்ற கல்கியின் இந்த கதையை எப்படியும் திரைப்படமாக்கி நடித்துவிட வேண்டும் என எம்.ஜி.ஆர் நினைத்தும் முடியாமல் போனது.

எண்பதுகளில் தமிழ் திரையுலகில் புதிய போக்கு ஒன்றை கொண்டு வந்த மணிரத்னம் என்கிற மகா கலைஞன் கையிலெடுத்து, களத்தில் குதித்திருக்கிறார். பொதுவாக புதினங்களை திரைப்படமாக்கும் திறமை இன்னும் இந்தியாவில் மெருகேறவில்லை என்கிற பொதுக் கருத்து நிலவுகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு, சில படங்கள் மட்டுமே, படைப்பாளியின் எழுத்திற்கு பங்கம் விளைவிக்காமல், மூலக்கரு சிதைக்கப்படாமல் செல்லுலாய்டில் உயிர் பெற்றுள்ளன.

வரலாற்று பின்னணியில் தயாராகி, சமீபத்தில் மிக பெரிய வெற்றிகளை குவித்த, பக்கத்து மாநில படைப்புகளுக்கு இணையாக.., பிரம்மாண்டத்தில், பின்னணி இசையில், சண்டைக்காட்சியில், ஒளிப்பதிவில் இப்படி இன்னும் பல நிகழ்கால தொழிற் நுட்பங்களுக்கு…, இந்த படைப்பு ஈடு கொடுக்குமா அல்லது இனி வரும் சரித்திர படைப்புகளுக்கு இந்த முயற்சி ஒரு இலக்குக் குறியாக இருக்க போகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓர் கற்பனை காவியத்தில் வீரம், காதல், நகைச்சுவை, துரோகம், மன்னிப்பு, தியாகம் போன்ற அனைத்து மனித மாண்புகளையும் உயிரோட்டமிக்க “இலக்கிய செல்லுலாயி டாக” அளித்த கல்கியின் கதையை, தனக்கே உரிய பாணியில் திரைக்கதை வடிவமைத்து “செல்லுலாயிட் இலக்கியமாக” மணிரத்னம் தமிழ் திரையுலகிற்கு தாரை வார்க்க போகிறார் என்பது நமக்கு பெருமை.

எந்த ஒரு சரித்திரக் கதையிலும், சரித்திரத்தின் நிகழ்வுக ளைச் சுற்றி கதாசிரியர் பல்வேறு ஊகங்களை, தனது கதை சொல்லலின் திறனை, கற்பனையினை இணைத்து, சரித்திரத்தின் விடுபட்ட மர்ம முடிச்சுகளை தன் பாணியில் அவிழ்த்து, கதையை சுவாரசியமாக கோர்வையாக சொல்ல வேண்டும். அப்போது தான் சரித்திர நாவலைப் படிக்கும் வாசகன் மனநிலை இன்னும் கிளர்ச்சியூட்டுவதாக அமையும்.

கற்பனை இல்லையென்றால், சரித்திரத்தின் கதை சொல்ல லில் வெற்றிடம் உருவாகி விடும். எந்த ஒரு சரித்திர கதையிலும் கற்பனை பாத்திரங்கள் இன்றி, கதை நகர்த்துதல் என்பது நிகழாது. இதை நன்கறிந்த கல்கி தனது படைப்பில் நிஜ பாத்திரங்களோடு, கற்பனை கதாபாத்திரங்களையும், அதற்கு வலு சேர்க்கும் சிறிய துணை பாத்திரங்களையும் தேவையான இடத்தில் தேவையான அளவிற்கு பயன்படுத்தி இருப்பார்.

அவர் புனைந்த கதாபாத்திரங்கள் தங்களுடைய பகுதியை பெருமளவில் பூர்த்தி செய்து இருந்தார்கள்…, அதே அளவு மணிரத்னம் தேர்வு செய்த திரை நட்சத்திரங்கள் அவர்களுக்கு கொடுத்த பொறுப்பை குறையின்றி கொடுத்திருக்கிறார்களா என காத்திருந்து காண்போம்.
பொன்னியின் செல்வன் புதினத்தின் உண்மையான நாயகன் அருள் மொழி வர்மனா இல்லை வந்தியத்தேவனா என்கிற விவாதம், இலக்கிய வாசகர் வட்டத்தில் இதுவரை இருந்து வந்தது.
இந்த திரைப்படம் வந்த பிறகு.., கதை சொன்ன கல்கி கிருஷ்ணமூர்த்தியா, திரைக்கதை செய்த மணிரத்னமா என்கிற ரீதியில் சினிமா ரசிகர் வட்டத்தில் பேசுப் பொருளாகும் என்பதில் சந்தேகமில்லை.
சில காவியங்களை படமாக்க முயற்சிக்காமல், அப்படியே விட்டுவிடுவது சாலச்சிறந்தது. அதில் பொன்னியின் செல்வனும் அடக்கம். இப்படியான சலிப்பை, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் தராது என நம்புவோமாக..

… இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top