பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு மணி மகுடம் சூட்டிய திரைக்காவியம் சங்கராபரணம். இன்றளவும் கர்நாடக சங்கீதத்தின் இலக்கணம் போன்று பாவிக்கப்படும் ஒரு படம். இதில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை.
சரி.., இந்த படத்தில் பாடியதற்கு தேசிய விருது கிடைத்ததில் என்ன அற்புதம் என கேட்கலாம்.இந்த படத்தை பார்த்த பின் பல சங்கீத மேதைகளே பாராட்டிய போது பாலசுப்ரமணியம் அமைதியாக சொன்னது இதுதான் எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது.
தூக்கி வாரிப்போட்டது பலருக்கு. என்னது முறைப்படி சங்கீதம் கற்றவனே தடுமாறும் இந்த காலத்தில் சங்கீத வாடையே இல்லாமல் இந்த ஆள் எப்படி பாடினான்.???
ஒரு வேளை சரஸ்வதியே வந்து நாவில் நர்த்தனம் செய்தாளோ என்னவோ என நினைத்துக் கொண்டனர்.
இந்த படத்திற்கு முதலில் பாடுவதாக இருந்தவர் பெயரை கேட்டால் நீங்க ஆச்சர்யப்படுவீர்கள். சங்கீத சக்கரவர்த்தியாக வலம் வந்த பாலமுரளி கிருஷ்ணாதான் அவர். அவர் பாட இயலாத காரணத்தால் பாலு பாடவைக்கப்பட்டார். பாலமுரளி கிருஷ்ணா செய்யாத விடயத்தை பாலுவை வைத்து வெற்றிகரமாக முடிப்பது என்பது கே.வி. மகாதேவன் போன்ற மேதைகளுக்கு மட்டுமே சாத்தியம்.
இந்த படம் வெளிவந்த போது பாலமுரளி கிருஷ்ணா கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால், அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டார் எஸ்.பி.பி. அவருக்கு எதிராக எந்த பதிலையும் கூறவில்லை. இதனால் எஸ்.பி.பி மீது மரியாதைக் கூடியது. பின்னர் ஒரு பேட்டியில் பாலமுரளி கிருஷ்ணா சொன்னார், ‘பாலமுரளி கிருஷ்ணா போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட முடியும். ஆனால், பாலமுரளி கிருஷ்ணாவால், எஸ்.பி.பி மாதிரி பாட முடியாது’ என்று.அதுதான் பாடும் நிலா பாலு.
…இங்கிலாந்திலிருந்து சங்கர்