Close
நவம்பர் 22, 2024 7:06 மணி

சென்னை மணலியில் ரூ.565 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாக கட்டுமான பணிகள்: மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி ஆய்வு

சென்னை

சென்னை மணலியில் அமைக்கப்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்ட மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி.

சென்னை மணலியில் ரூ.565 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின்  ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை  இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்போரேசன் சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்திற்கு உள்பட்ட ஆமுல்லைவாயல், வைக்காடு கிராமத்தில் ரூ. 565 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய அளவிலான அதிநவீன ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது சர்வதேச அளவில் உயவு எண்ணெய் தொழிற்சாலைகளில் சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய வளாகமாக அமையும்.  இதன் திட்டப் பணிகள் 2023, டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை  இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அமைய உள்ள தொழிற்சாலைகளின் குறித்து இத்திட்டத்தின் தலைமைப் பொது மேலாளர் எஸ்.என்.விஜயகுமார் அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

ஆய்வுக்குப்பின்னர், அமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறியது:
இதுபோன்ற மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் தொழிற்சாலை திட்டங்களுக்கான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படுவதில்லை.  ஆனால் தற்போது மத்திய அரசின் தீவிர கண்காணிப்பு காரணமாக தற்போது உரிய காலத்தில் திட்டங்கள் முடிவடைகின்றன.

 சென்னையில் செயல்படவிருக்கும் இந்த உயவு எண்ணெய் தொழிற்சாலைக்கு  சாதகமான பல அம்சங்கள் இருக்கிறது.  இத்திட்ட வளாகத்திற்கு மிக அருகில் சென்னை எண்ணய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்)  இருப்பதோடு மட்டுமல்லாது சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களுடன்  குழாயால்  இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மோட்டார் வாகன  தயாரிப்பு தொழிற்சாலைகளும், ஏற்றுமதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக சென்னை இருந்து வரும் நிலையில் உலகத் தரத்துடனான நவீன உயவு எண்ணெய் தேவையை இத்தொழிற்சாலை பூர்த்தி செய்யும். ரோபோக்கள், தானியங்கி குழாய் பாதை, புதுபிக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றுடன் இந்த தொழிற்சாலை முழுமையும் கலத்தல் மற்றும் நிரப்புதல் பணிகள் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட் டுள்ளது என்றார் அமைச்சர் ராமேஸ்வர் தெலி.
ஆய்வின்போது இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் செயல் இயக்குனர் வி.சி.அசோகன் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top