Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.30 கோடி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை முக்கனி கோஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடக்கி வைத்து பார்வையிடுகிறார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.30 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

புதுக்கோட்டை புதிய பேருந்துநிலைய வளாகத்தில் அமைந்துள்ள முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டு களாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து, இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள்.

கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மண்டலத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் கடந்த தீபாவளி 2021 பண்டிகை காலத்தில் ரூ.749.15 இலட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது தீபாவளி 2022 -க்கு ரூ.130 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 பண்டிகை காலத்தில்; ரூ.94 இலட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது தீபாவளி 2022 -க்கு ரூ.130 இலட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கனவு நனவு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 11 -ஆவது மற்றும் 12 -ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20% அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும்  கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் லெனின், மண்டல மேலாளர்; அம்சவேணி, மேலாளர் (இரகம் மற்றும் பகிர்மானம்) கூடுதல் பொறுப்பு அய்யப்பன், விற்பனை நிலைய மேலாளர்கள் பாண்டியன், ராஜ்முகமது மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top