Close
நவம்பர் 24, 2024 9:32 காலை

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்…தமிழ்நாட்டின் பெருமையை நாசா வரை கொண்டு சென்ற பெண் ஜெயலட்சுமி

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை நாசா ஜெயலட்சுமி

சர்வதேச பெண் குழந்தைகள் நாளில், தமிழ் நாட்டின் பெருமையை நாசா வரை கொண்டு சென்ற பெண் (குழந்தை) ஜெயலட்சுமியை வாழ்த்துவோம்,

பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் , அவர்களுக்கு நேரும் பிரச்னைகளைத் தடுக்கவும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை 2011-ஆம் ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றியது , அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ஆம் நாள், ‘சர்வதேச பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை மையமாக கொண்டு இந்தநாளில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த +2 தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை தொடரும் 18 வயதான ஜெயலட்சுமியை ஊக்கப்படுத்து வதற்கான ஒரு பதிவு ஆகும்

ஆமாம் யார் இந்த ஜெயலட்சுமி …
பழுதடைந்த வீடு, குடும்பத்தை விட்டு வெளியேறிய பொறுப் பற்ற தந்தை , மனநிலை பாதித்த தாய், தாயையும் கவனித்துக் கொண்டு தன்னுடைய தம்பியின் கல்வி முதல் பாதுகாப்பு வரை பொறுப்பேற்று பெரும் குடும்ப சுமை கொண்ட பின்னணியில் வாழ்ந்து வரும் மாணவி தான் ஜெயலட்சுமி.

வறுமையான குடும்ப பின்னணி இருந்தபோதும் , இந்தியா வையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறாள் இச்சிறு பெண் …

மிக கடினமான குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்லக் கடந்த ஆண்டு தேர்வானார் ஜெயலட்சுமி. நாசா ஜெயலட்சுமி என இப்போது புதுக்கோட்டையே கொண்டாடுகிறது …

நாசா சென்று வர பலரும் உதவ முன்வந்திருக்கின்றனர் . ஒரு சமூக அமைப்பு ஜெயலட்சுமி யிடம் “பாப்பா உனக்கு நாங்க பெருசா ஏதாவது செய்யணும் , என்ன வேணும் கேள் எதுவாக இருந்தாலும் நாங்க உனக்கு செய்கிறோம்” என்று வாக்கு கொடுத்தனர்.

அதற்கு ஜெயலட்சுமி கேட்ட உதவி என்ன தெரியுமா , “ஐயா எனக்கு இப்போதைக்கு நாசா சென்றுவர தேவையான உதவி கிடைத்து இருக்கிறது. ஆனால் எங்கள் ஊரில் யார் வீட்டிலும் கழிப்பிட வசதி முறையாக இல்லை. அதனால் எல்லோரும் மிகவும் சிரமப்படுகிறோம்.  முடிந்தால் எங்கள் ஊருக்குத் தேவையான கழிப்பிட வசதி செய்து கொடுங்கள்” என்று கேட்டு இருக்கிறாள்.

அந்த அமைப்பினர் அவளது இந்த வேண்டுகோளை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்று, அவள் வசிக்கும் புதுக்கோட்டை அருகே இருக்கும் ஆதனங்கோட்டையில் 126 கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கின்றனர்.இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுங்களா…

‘வறுமையிலும் செம்மை’ காத்து, தனக்கென்று எதுவும் கேட்காமல் ஊருக்கான தேவையை கேட்டு பூர்த்தி செய்த அவளது மனித நேய குணத்தை போற்றும் விதமாக ‘கனவு மெய்ப்படும்’ என்ற தலைப்பில் மகாராஷ்டிர மாநிலத்தில் 7 -ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் ஜெயலட்சுமி இடம்பெற்றிருக்கிறாள் .

நம் நாசா ஜெயலட்சுமியின் குடும்ப வளர்ச்சிக்கு நம்மாலும் கூட உதவ முடியும்..

ஆமாம் அவளது அன்றாட குடும்பத் தேவைக்காக தினமும் மாலையில் மொத்தமாக முந்திரி பருப்பை வாங்கி சுத்தம் செய்து பாக்கெட்டுகளாக்கி விற்பனை செய்யும் குடிசை தொழில் செய்து தான் தனது குடும்பத்தை கவனித்து வருகிறாள் சிறுமி ஜெயலட்சுமி. அவளது இந்த தொழிலை நாமும் ஊக்கப்படுத்தலாம் .

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஜெயலட்சுமியின் அலைபேசியின் +91 70948 16102 இந்த எண்ணுக்கு அழைத்து நமக்கு தேவையான தரமான முந்திரி பருப்புகளை ஜெயலட்சுமியிடமே வாங்கி உதவலாமே. சுயநலமாய் யோசிக்காமல் சுயமாக சம்பாதித்து வாழ்ந்து காட்டணும் என்ற வைராக்கியம் கொண்ட ஜெயலட்சுமிக்கு இது பெரிய உதவியாக இருக்கும் .

முந்திரி பருப்பிற்கு ஆர்டரை பதிவு செய்ய ஜெயலட்சுமிக்கு கால் செய்யும் பொழுது அவளுக்கு வாழ்த்துச் சொல்ல மறந்துடாதிங்க  என்கிறார் ஈரநெஞ்சம் அறநிலைய நிறுவனர் மகேந்திரன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top