Close
நவம்பர் 22, 2024 6:14 மணி

சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு நாள்: புதுக்கோட்டையில்  தீயணைப்புத் துறை வீரர்கள் நடத்திய மாதிரி ஒத்திகை

புதுக்கோட்டை

சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் தீயணைப்புத்துறை வீரர்கள் நடத்திய மாதிரி போலி ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,பார்வையிட்டார்.

சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில்  தீயணைப்புத்துறை வீரர்கள் மாதிரி போலி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தேசிய பேரிடர் துயர் குறைப்பு நாள் அக்டோபர் மாதம் கடைசி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

இயற்கை பேரழிவுகள், மனிதனால் ஏற்படும் பேரழிவுகள்,  இன்னல் இடர் நீக்கும் மேலாண்மை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.இயற்கையாகவும் மனிதனின் கவனக் குறைவினாலும், தீவிரவாத செயல்களாலும் ஏற்படும் இழப்புகள் இன்னல்கள் போன்ற பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே  இந்நாளின் நோக்கமாகும்.

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் போன்றவைகள் மூலம் ஏற்படும் பேரழிவுகளை இயற்கை பேரழிவுகள் என்று சொல்லலாம். நிலத்தின் சீற்றம் நில நடுக்கம் மற்றும் பூகம்பமாகவும் நீரின் சீற்றம் வெள்ளம் ஆகவும், நெருப்பின் சீற்றம் எரிமலை சீற்றம் ஆகவும், ஆகாயத்தின் சீற்றம், ஓசோனில் ஓட்டையால் காற்றின் சீற்றம் புயல் ஆகவும் மாறி பேரழிவை ஏற்படுத்துகின்றன.

அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதன் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ஆகியவற்றைத் தனக்கு சாதகமாக பயன்படுத்த கற்றுக்கொன்டதன் விளைவாக மனிதத் தவறுகள் மற்றும் கவனக்குறைவுகளால் தீ விபத்து, சாலை விபத்து கட்டிட விபத்து, கப்பல், படகு விபத்துகள், மின்சார விபத்துகள் ஆகாய விமான விபத்துகள், தீவிரவாதத்தால் ஏற்படும் போர், வெடிகுண்டு அணுகுண்டு மற்றும் ஏவுகணைகள் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றால் பொருளாதார மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இவை யாவும் மனிதனால் ஏற்படும் பேரிடராகும்.

இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் இன்னல்களின் தன்மைகளை அறிந்து அவற்றால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபட உதவும் உத்திகளை அறிந்து செயல்படுவதை இன்னல் இடர் நீக்கும் மேலாண்மை என்று அழைக்கிறோம்.இன்னல் இடர் நீக்கும் மேலாண்மை முன்னேற்பாடு, எச்சரிக்கை, தாக்கும் நிலை, காப்பாற்றும் நடவடிக்கை, மீட்பு நடவடிக்கை,  புனர் வாழ்வளித்தல், மறுசீரமைத்தல், இன்னலை தவிர்க்க நீண்ட கால திட்டம் திட்ட செயலாக்கம் என்னும் படிநிலைகளில் அமைகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில், சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீயணைப்புத்துறை வீரர்கள் நடத்திய மாதிரி போலி ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆற்றில் சிக்கிய பொதுமக்களை கயிறு மூலம் எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும், தீ விபத்தின் போது ஏற்படும் தீ மற்றும் புகை மூட்டத்திலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்தும், நீர் நிலைகளில் லைப் ஜாக்கெட்  பயன்படுத்தி காப்பாற்றுவது.

வீட்டில் உள்ள பொருட்களான சைக்கிள் டியூப், சிலிண்டர், குடங்கள் மற்றும் தண்ணீர் கேன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி நீர்நிலைகளிலிருந்து பொதுமக்களை வெளிகொண்டு வருவது குறித்தும், எந்தவொரு பொருள் இல்லாமல் விபத்தில் சிக்கியவர்களை கைகள் உதவியோடு காப்பாற்றுவது.

ஹைட்ராலிக் கருவி மூலம் மழைக்காலத்தில் கட்டட இடுப்பாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்தும், எரிவாயு உருளைகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்தும், வீட்டில் சமைக்கும் பொழுது ஏற்படும் தீ விபத்துகளை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே கட்டுப்படுத்துவது.

பவர் சா மூலமாக வெள்ள காலங்களில் இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றுவது போன்ற மீட்புப்பணிகள் குறித்தும் மாதிரி போலி ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்துகொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பிரிவில் 10-20, 21-40, 41-60, 60 வயதிற்கு மேல் உள்ள 14 நபர்களுக்கு ரூ.44,000 மதிப்பிலான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சூரியபிரபு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top