சொத்துவரி மின்கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது .
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து நிர்வாகி வி.கே. ராஜமாணிக்கம் பேசியதாவது: இரண்டு ஆண்டுகள் கொரோனா தாக்கத்திற்கு பின் தற்போது தான் தொழில் மற்றும் வணிகம் மீண்டு வருகிறது. இந்நிலையில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் கொள்முதல் செய்யப்படும் வேளாண் பொருள்களுக்கு ஒரு சதவீதம் செஸ் விதிக்கப்படுகிறது.
ஈரோட்டில் உள்ள பழமையான பல கட்டடங்களுக்கு 100% வரிவிதிப்பு என்பது வாடகை மதிப்பிற்கு பொருத்தம் இல்லாதது. ஏற்கெனவே குடிநீர் வரி நூலக வரி என பல வரிகள் உள்ளன. ஆகவே சொத்து வரியை 25% என குறைக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு, ஏற்கெனவே சதுர அடி கணக்கீட்டில் வரி விதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
மின் கட்டண உயர்வு தொழில் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் பீக் ஹவர் கட்டணம் என்பது தொழில்களுக்கு சாவு மணி அடிக்கும். சூரிய ஒளி மின்சாரம் பகலில் உற்பத்தி ஆகிறது. எனவே பகலில் பீக்ஹவர் கட்டணம் என்பது தேவையற்றது. இரவு 10 மணிக்கு மேல் மின் உற்பத்தி மீதம் ஆவதால், அந்த மின்சாரத்தை 25% கட்டணத்தில் வழங்க வேண்டும். வேளாண் பருவ காலங்களில் தொழில் நிறுவனங்களுக்கு அதிக மின்சாரம் தேவைப்படும். சீசன் முடிந்ததும் மின் தேவை குறையும். அச்சமயத்தில் பிக்ஸ் சார்ஜ் 112 கே.வி -க்கு மாதம் ரூ550 விதம் நிரந்தர கட்டணம் வசூல் செய்வது, உணவு உற்பத்தி செய்யும் ஆலைகளை பாதிக்கும். எனவே பிக்சட் சார்ஜை குறைக்க வேண்டும்.
வணிக நிறுவனத்தில் உள்ள சூரிய ஒளி மின் உற்பத்தியை அரசு ரூபாய் 2.08 ஒரு யூனிட் என வாங்கு வழங்குகிறது. ஆனால் அரசு ரூ 9.50 ஒரு யூனிட் என வசூல் செய்கிறது. மேலும் ஒரு கிலோ வாட்டுக்கு மின் உற்பத்திக்கு ரூபாய் 385 இரண்டு மாத கட்டணமாக வசூல் செய்ய உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகம் பின்தங்கி உள்ளது.
எனவே சூரிய ஒளி மின்சார கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். நிரந்தர கட்டணத்தை விளக்கிக் கொள்ள வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியே பெரும் வேலை வாய்ப்பு வழங்குகிறது. மகாராஷ்டிராவில் விசைத்தறிக்கு மின் கட்டண ரூ 4 மட்டும்தான். ஆனால் நமது மாநிலத்தில் மின்கட்டணம் கடுமையாக உள்ளது. அதனால் இங்கிருந்து தொழில் ரீதியாக மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசத்துக்கு செல்லும் விசைத்தறிக்கு1500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அதற்கு மேல் யூனிட்டுக்கு ரூ4.20 என வசூலிக்க வேண்டும் என்றார் அவர்.
இதில், கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஆர் முருகானந்தம், வரி செலுத்துவோர் சங்க செயலாளர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.