Close
நவம்பர் 24, 2024 8:16 மணி

தமுஎகச சார்பில்  புதுக்கோட்டையில்   கோலாகமாக தொடங்கியது உலகத்திரைப்பட விழா

புதுக்கோட்டை

தமுஎகச சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, நடிகை ரோகிணி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத்திரைப்பட விழா புதுக்கோட்டை ‘வெஸ்ட்’ திரையங்கத்தில் வெள்ளிக்கிழமை கோலாகமாக தொடங்கியது.

தொடக்க விழாவிங்கு தமுஎகச மாநில துணைத் தலைவரும், திரைக் கலைஞருமான ரோகிணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா தொடக்க வுரையாற்றினார்.  விழாவுக்கான நோக்கம் குறித்துமாநில துணைப் பொதுச்செயலாளர் களப்பிரன் பேசினார்.  திரையிடல் குறித்து திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார் பேசினார்.

விழாவில்,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், தொழிலதிபர் அ.ப.மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு உள்ளிட்டோர் பேசினர்.

விழாவில் தமுஎகச மாநில துணைத்தலைவரும், திரை க்கலைஞருமான ரோகிணி தனது தலைமையுரையில் பேசியதாவது: உரையாடலில் கிடைக்கும் சொற்கள் புதிய கதவைத் திறந்துவிடக்கூடும்.ஆரம்பத்தில் இந்தத் திரைப்பட விழாவை நமக்கான விழாவாகத்தான் இதை நடத்தினோம். இதை உலகம் போற்றக்கூடிய விழாவாக நாம் மாற்ற வேண்டும்.

இது திரைப்படங்களைப் பார்ப்பதற்கான நிகழ்வு மட்டுமல்ல. வெறும் திரைப்படங்களாக மட்டுமல்லாமல் அதில் உள்ள அரசியலையும் பார்க்க வேண்டும். நாம் வாழ்க்கையின் அனைத்துமே அரசியல் சார்ந்ததாகத்தான் இருக்க முடியும். அரசியல் இல்லாத வாழ்வு என்பது எப்பொழுதும் யாருக்கும் இருந்ததில்லை.

மவுனமாக இருப்பது கூட ஒரு அரசியல்தான். அரசியல் இல்லாத ஒரு வாழ்வு இருக்க முடியாது என்கிற போது, நமக்குள்ளே தனிமனித அரசியலை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எளிய மனிதனின் வாழ்க்கை இங்கே இருக்கலாம். ஈராக்கிலேயும் இருக்கலாம். ஆனால், அவனுடைய வலி என்பது ஒன்றுதான். அந்த வலியை எதிர்த்து அவர்கள் செய்திருக்கக்கூடிய வழிமுறைகள் என்ன என்பதை திரைமொழியோடு சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு வாய்ப்பு நமக்கு அமைந்துள்ளது.

திரைமொழி என்பது மிக முக்கியமானது. ஒரு கதையை நாம் படிக்கும் போது அது நமக்கு பிடித்த கதையாக மாறுகிறது. அதே கதை திரையில் புது மொழியாக மாறி முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த திரைப்படங்கள் சொல்லும் பிரச்சினைகளை நீங்கள் புரிந்துகொண்டு விவாதிக்க வேண்டும். உரையாடலின் போது கிடைக்கும் சொற்கள் படைப்பாளிகளுக்கு கூடுதலாக ஒரு கதவைத் திறந்துவிடக் கூடும் என்றார் ரோகிணி.

விழாவில் திரைப்பட இயக்குனர்கள் சசி, வினோத்ராஜ், ஒளிப்பதிவாளர் விக்னேஷ்குமுளை, தமுஎகச நிர்வாகிகள் கவிஞர்கள் நந்தலாலா, நா.முத்துநிலவன், ஆர்.நீலா, ஸ்ரீரசா, வெண்புறா, ராசி.பன்னீர்செல்வன், கி.ஜெயபாலன், இரா.தனிக்கொடி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக வரவேற்புக்குழுத் தலைவர் கிருஷ்ணவரதராஜன் வரவேற்றார்.  துணைத் தலைவர் சு.மதியழகன் நன்றி கூறினார். மாவட்டச் செயலளார் எம்.ஸ்டாலின் சரவணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்

இதைத்தொடந்து தொடர்ந்து கூழாங்கல், ஹிட் தி ரோடு, கம்பார்ட்மெண்ட எண்.6  ஆகிய  திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தொடர்ந்து 5 நாட்களும் 11 நாடுகளைச் சேர்ந்த 23 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. திரைப்படங்கள் குறித்து ஒவ்வொரு நாளும் திரை ஆளுமைகளுடன் எழுத்தாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top