மலேசியாவில் சிக்கித் தவிக்கும் மனைவியை மீட்டுத்தர வேண்டுமென புதுகை ஆட்சியரிடம் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மனைவியை மீட்டுத்தருமாக அவரது கணவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங்குறிச்சியைச் சேர்ந்த ரஜினிக்காந்த் என்பதை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வெண்ணிலா என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 01.09.2022 அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற எனது மனைவியைக் காணவில்லை. எனது மனைவியைத் தேடி விசாரித்தபோது குரும்பூண்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற ஏஜெண்ட் மூலம் மலேசியாவுக்கு சென்றுள்ளது தெரியவந்தது.
நல்ல சம்பளம் என்று ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்ற சுரேஷ்குமார், எனது மனைவியை அழைத்துச் சென்று அங்குள்ள தரகரிடம் விற்றுவிட்டது தெரியவந்தது. இந்நிலையில், தற்பொழுது எனது மனைவி மலேசியாவில் துன்புறுத்தப்படுவதாகவும், தன்னை மீட்டுத்தருமாறும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் வாட்ச்அப் மூலம் வீடியோ காலில் பேசி கண்ணீர் வடித்துள்ளார்.
இதனால், நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையில் உள்ளோம். எனவே, எனது மனைவி வெண்ணிலாவை மீட்டுத்தர தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.