Close
செப்டம்பர் 20, 2024 9:42 காலை

திரை இயக்க செயல்பாட்டாளருக்கு உலக திரைப்பட விழாவில் பாராட்டு

புதுக்கோட்டை

உலகத் திரைப்படங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் முக்கியமான பணியில் ஈடுபட்டு வரும் எஸ்.இளங்கோ உலக திரைப்படவிழாவில் கௌரவிக்கப்பட்டார்

திரை இயக்க செயல்பாட்டாளர் எஸ்.இளங்கோவுக்கு
உலகத் திரைப்பட விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டையில்  35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து உலகத் திரைப்படங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் முக்கியமான பணியில் ஈடுபட்டு வரும் எஸ்.இளங்கோவுக்கு புதுக்கோட்டையில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் கௌரவிக்கப்பட்டார்.

1986 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட புதுகை பிலிம் சொஸைட்டி யின் நிறுவனர் செயலாளராகப் பொறுப்பேற்றவர் எஸ்.இளங்கோ.   அவ்வாண்டு துவங்கி 1995 வரை பிலிம் ரோல்களின் காலத்தில் 16 எம்எம், 35 எம்எம் உலகத் திரைப் படங்களைத் திரையிட்டு தற்போது டிஜிட்டல் வடிவத்திலும் மாற்று சினிமாவுக்கான இயக்கத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் நடத்தி வருகிறார்.

1940 மற்றும் 1950 -களில் வங்காளத்தில் சத்யஜித் ரே போன்றவர்கள் உலகத்தரமான திரைப்படங்களை உருவாக்கித் தந்தனர்.  மேலும் வங்காளத்தில் ரித்விக் கட்டக், மிருணாள்சென் இந்தியில் ஷியாம் பெனகல், கோவிந்த் நிஹ்லானி, மலையாளத்தில் அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன், கன்னடத்தில் கிரிஷ் கர்னாட், தமிழில் ருத்ரய்யா, ஜெயகாந்தன் போன்றவர்கள் மாற்று சினிமாவை உருவாக்கியவர்கள்.

இதுபோன்று உலக அளவில் ஜப்பானின் அகிரா குரோசோவா, ஸ்வீடனின் இங்மர் பெர்க்மேன், இத்தாலியின் விட்டோரியா டி சைகா போன்றவர்களின் திரைப்படங்களை புதுக்கோட்டைக்கு வரவழைத்து இங்குள்ள ரசிகர்களுக்கு அத்திரைப்படங்களை திரையிட்டுக் காட்டியவர்.

 90-களில் தமிழ் சினிமாவில் புதிய அலை இயக்குநர்களாக உருவாகி வந்த பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்றவர் களின் கலாபூர்வமான சினிமாக்களைத் திரையிட்டதோடு அவர்களை புதுக்கோட்டைக்கு வரவழைத்து நேர்காணல் நிகழ்ச்சிகளையும் நடத்தியவர் எஸ்.இளங்கோ.

இந்திய மற்றும் உலக மொழிப்படங்களை வரவழைத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு திரைப்பட விழாக்களை நடத்தியவர்.  சினிமா குறித்த கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ததோடு, உலக சினிமாக்களை அறிமுகம் செய்து இதுவரை எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

இவ்விழாவில் எஸ்.இளங்கோ எழுதிய என் தம்பி டையனோசர்களை துரத்துகிறான்  என்ற உலக சினிமா கட்டுரை தொகுப்பு நூலும்  வெளியிடப்பட்டது.  நூலை தமுஎகச மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் வெளியிட மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிசுடர் கவிதைப்பித்தன் பெற்றுக்கொண்டார். பாராட்டு விழாவிற்கு கவிஞர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமுஎகச மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top