நாடு முழுவதும் நாளை (அக்.24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக இன்று அனைத்து மக்களும் பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்கிட கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கீழராஜ வீதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்தினருக்கு தேவையான புத்தாடைகள், இனிப்பு வகைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை குவிந்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி புதுக்கோட்டையில் பண்டிகைக்கான ஜவுளிகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கீழராஜ வீதி, மேலராஜ வீதி, வடராஜ வீதி, தெற்கு ராஜ வீதி ஆகிய கடைவீதிகளில் அலை மோதியது. பண்டிகைக்காக சாலையோர கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன.
அதோடு போலீசார் பொதுமக்களுக்கு அவர்கள் கொண்டு வரும் ஒரு பொருள்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைகளும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை டவுன் போலீசார் மேற்கொண்டுள் ளனர். இந்தநிலையில், கீழராஜ வீதி அண்ணா சாலை அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி, இன்ஸ்பெக்டர் குருநாதன் உள்பட போலீசார் கலந்து கொண்டனர் .
30 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பதிவாகும் காட்சிகளை இந்த புறக்காவல் நிலையத்தில் இருந்து போலீசார் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில் பெரிய திரையில் தெரியும் காட்சிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பார்வையிட்டார். இரும்பு தடுப்புகள் கீழ ராஜ வீதியில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையில் நடுப்பகுதியில் இரும்பு தடுப்புகள் போடப்பட்டன.
ஒரு வழி பாதை போல கடை வீதிக்குள் ஒரு புறமும் மக்கள் நடந்து செல்லவும், மறுபுறம் கடைவீதியில் இருந்து பொதுமக்கள் வெளியே நடந்து வருவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை அருகேயும் பிருந்தாவன் பகுதியிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பழைய பஸ் நிலையம் அருகே இரும்பு தடுப்புகள் அமைத்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளன.
பண்டிகையையொட்டி பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள், கார்களில் வருவதால் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. 100 போலீசார் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை கண்காணிக்கவும் தடுக்கவும் பாதுகாப்பு பணியில் 100 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் போடப்பட்டு அதில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.