Close
செப்டம்பர் 20, 2024 6:49 காலை

விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்துக்கு நூல்கள் ஆவணங்கள் அளித்து உதவ மக்கள்சிந்தனைப் பேரவை வேண்டுகோள்

ஈரோடு

மக்கள் சிந்தனை பேரவை

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நிறுவப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வரலாற்று ஆய்வு மையத்துக்கு நூல்கள் மற்றும் ஆவணங்கள் கொடுத்து உதவிட வேண்டுகோள் விடுத்துள்ளது.

மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர்  ஈரோடு த. ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு
ஸ்டாலின்குணசேகரன்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கை முழுமையாக வெளிக் கொண்டுவர கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பலவித தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்தத் திசை வழியிலான எமது தொடர்ந்த ஆய்வு பயணத்தின் விளைவாக ‘ஜீவா முழக்கம்’ சுதந்திரப் பொன் விழா மலர் ( 1997 ), ‘ தேச விடுதலையும் தியாகச்சுடர்களும்’ ( 1998 ), ‘ விடுதலை வேள்வியில் தமிழகம்’ – 2 பாகங்கள் ( 2001 ), ‘சுதந்திரச் சுடர்கள்’ ( 2016 ) ஆகிய எமது நூல்களும் பல முக்கிய இதழ்களில் எமதுகட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன.

‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற எமது தொகுப்பு நூலின் மூன்றாம் பாகம்  விரைவில் வெளிவரவுள்ளது. ‘தினமணி ’ யில் தினசரி வெளியான ‘தமிழக தியாகதீபங்கள்’ என்ற தலைப்பிலான எமது தொடர் கட்டுரைகளும் நூல் வடிவம் பெறவுள்ளது.

விடுதலைப் போராட்ட வரலாற்று ஆய்வு மையம்  ஏற்படுத்த பேரவை சார்பில் 2004 இல் தீர்மானிக்கப்பட்டது. 11.12.2004 ஆம் தேதி நடைபெற்ற பாரதி விழாவில்இதற்கான கல்வெட்டு அடையாளப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்திய சுதந்திரத்தின் 75 -ஆம் ஆண்டை முன்னிட்டு இவ்வாண்டின் சிறப்புத் திட்டமாக இவ்வரலாற்று ஆய்வு மையத்தை முழுமைப்படுத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் தமிழகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், தமிழ்மண்ணில் நிகழ்ந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களைப் பற்றிய நூல்கள், இவை பற்றியான M.Phil, PhD  ஆய்வேடுகள், சிறப்பு மலர்கள், ஆவணங்கள், கட்டுரைகள், புகைப்படங்கள், பதிவுகள் என எது இருந்தாலும் இம்முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் பேரவைக்குக் கொடுத்துதவ வேண்டுகிறோம்.

தொடர்பு முகவரி : மக்கள் சிந்தனைப் பேரவை, A – 47 , சம்பத் நகர், ஈரோடு  638 011 , தொலைபேசி : 0424- 2269186 , மின்னஞ்சல் :info@makkalsinthanaiperavai.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top