புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (25.10.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து தீர்க்கும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற தனித் துறையை உருவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சரிடம் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பரிந்துரைகளை வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதன்படி ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டி னை குறைப்பதற்காக முதலமைச்சர் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை செயல்படுத்தி யதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.
மேலும் பொது இடங்கள், விழாக்கள் போன்ற இடங்களில் சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தும் காரணிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டின் மூலம் அனைத்து உயிர்கள், நீர்நிலைகள் மற்றும் இடங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. எனவே பொதுமக்கள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய தொகுதியாக மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.