தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தினர் விவசாய நிலம் வாங்க ரூ. 5 லட்சம் மானியம் தமிழகத்தில் விளம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிலம்வாங்கும் திட்டத்தின்கீழ் நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலம் வாங்க திட்ட தொகையில் 50சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
அதில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு 03 பழங்குடியினர் வகுப்பினருக்கு 01 எனவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மகளிருக்குமுன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவன் அல்லது மகன்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் வாங்க உள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்ய வேண்டும். நிலம் விற்பனைசெய்பவர் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.இத்திட்டத்தின்கீழ் நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு விற்பனைசெய்யக்கூடாது.
நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லதுஅதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் வாங்கப்படும்நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைதாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடராக இருப்பின், http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் பழங்குடியினராக இருப்பின்http://fast.tahdco.comஎன்ற இணையதள முகவரியில் நிலம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், இது தொடர்பான விவரங்கள் அறிய மாவட்ட மேலாளர் அலுவலகம்,தாட்கோ காட்டுப்புதுகுளம், பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை புதுக்கோட்டை அலுவலகத்தை நேரிலோ அல்லது 04322-221487 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணை: விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய தமிழக முதல்வரின் எண்ணத்திற்கு உருவம் கொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். ரூ.10 கோடி மதிப்பீட்டில் 200 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க மானியம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.