Close
செப்டம்பர் 20, 2024 5:36 காலை

உள்ளாட்சிகள் நாள்: பொன்னமராவதியில் பேரூர் சபைக்கூட்டம் : அமைச்சர் ரகுபதி பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடந்த பேரூர் சபைக்கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி

உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி 10 வது வார்டில் பேரூர்சபைக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, 10 வது வார்டில், உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற  பேரூர்சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாள ராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொண்டார்.

பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில், கூட்டப்பொருட்களான, பொது நிதி செலவினம் பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பொருள்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்களை சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்த விவரப்பட்டியல் வார்டு குழுவின் பார்வைக்கும், செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் குறித்த விவரப்பட்டியல் வார்டு பகுதி சபைவின் பார்வைக்கும்.

அரசின் அனைத்துத்துறை திட்டங்களினால் பயன்பெற்ற பயனாளிகள் பட்டியல் வார்டு குழு பகுதி சபையின் பார்வைக்கும், இது நாள்வரை வரி மற்றும் வரியில்லா இனங்கள் (சொத்துவரி, குடிநீர் கட்டணம்) செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் விவரப் பட்டியல் வார்டு குழுவின் பார்வைக்கு வைப்பது, பொதுமக்களின் இதர கோரிக்கைகளும் பதிவு செய்தல் உள்ளிட்ட 5 பொருள் குறித்து பரிசீலிக்கப்பட்டது.

இதில்,சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி பேசியதாவது:தமிழக முதலமைச்சர்  நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி நவம்பர் 1 ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் சபைக் கூட்டங்களும், கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்களும்  நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி, 10 வது வார்டில் நடைபெறும் சபாக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்கள் மற்றும் தேவைகள் குறித்து தெரிவித்துள்ளார்கள். மேலும் பொதுமக்கள் வழங்கிய 22 கோரிக்கை மனுக்களின் மீது நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் பேரூராட்சிகள் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் நகர்புற வளர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இது போன்ற மக்கள் நலத் திட்டங்களால் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சியை அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அதிகப்படியான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் நகராட்சியாக தரம் உயர்த்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களையும், தங்களது பகுதிகளையும் மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

இக்கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டாட்சியர் பிரகாஷ், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி.

பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெயராமன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, பேரூராட்சி துணை சேர்மன் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன்.

 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வருவாய்த் துறையினர், சுகாதார செவிலியர்கள், டெங்கு களப்பணியாளர்கள், திமுக ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top