தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை முழுமையாக வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வடசென்னைக்கு உள்பட்ட திருவொற்றியூர் மேற்கு பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. செவ்வாய்க் கிழமை இரவு கொட்டித் தீர்த்த கனமழையால் திருவொற்றியூர் மேற்கு பகுதிக்கு செல்லும் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் கலைஞர் நகர், ஜோதி நகர், ராஜா சண்முகம், நகர், அண்ணாமலை நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நகர்களுக்கு செல்லும் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது. இதனையடுத்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுரங்கப்பாதை மீது மேலே சென்று ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.
மேலும் எர்ணாவூர் மேம்பாலம் வழியாகமணலி விரைவு சாலையில் பயணித்து நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனர்.ஆனால் மணலி விரைவு சாலையிலும் ஏற்கனவே வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வெள்ளம் சூழ்ந்த கார்கில் நகர்: கனமழை தொடர்ந்து பெய்யும் போதெல்லாம் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கார்கில் நகர் ராமசாமி நகர் சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் முழுவதும் மழைநீர் சூழ்ந்து விடும் நிலை தொடர்கதையாகும். புழல் ஏரி உபரி நீர் புதன்கிழமை மாலை திறக்கப்பட்டுள்ள நிலையில் புதன்கிழமை இரவு கனமழை பெய்யும் நிலையில் இப்பகுதி முழுமையாக துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
இதனால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பல்வேறு பொது நல சங்கங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
வெள்ளம் சூழ்ந்துள்ள திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதையை சட்டப்பேரவை உறுப்பினர் கே பி சங்கர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. குப்பன் உள்ளிட்டோர் பார்வையிட்டு உடனடியாக வெள்ளநீரை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.
பின்னர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பழுதுபட்ட மின்மோட்டாரை சீரமைத்து வெள்ளநீரை அகற்றும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் புதன்கிழமை பிற்பகல் வெள்ளநீர் முழுமையாக அகற்றப்பட்டு வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. சுரங்கப்பாதையில் இருசக்கர மூன்று சக்கர வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.