விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்.
இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். கடந்த ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் அமாவாசை உள்ளிட்ட 4 நாட்களும், மலைப் பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
வரும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக, பக்தர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், மலைக் கோவிலுக்குச் செல்லும் வழிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து மிகவும் அதிகரித்துள்ளது.
இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, வரும் 5ம் தேதி (சனிகிழமை) பிரதோஷம் நாளில் இருந்து, 8-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பௌர்ணமி நாள் வரையிலான 4 நாட்களும் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. வனத்துறை அறிவிப்பால் சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.