Close
நவம்பர் 22, 2024 12:44 மணி

அதிமுகவின் அனைத்து அணிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் 

சென்னை

அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுகவில் பிரிந்து கிடக்கும்  அனைத்து அணிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தினார்.
அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் க. பாண்டியராஜன்  தெரிவித்தார் .
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா  மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் தலைமையில், ஆர். கே. நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மாபா க. பாண்டியராஜன் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது:
சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு பொதுமக்களுக்கு உதவிடவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது.
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த சுமார் 28 மக்கள் நல திட்டங்களை திமுக அரசு அரசியல் காழ்ப்பு ணர்ச்சி காரணமாக நிறுத்தியுள்ளது. இதில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் அடங்கியுள்ளன. முதியோர் உதவித் தொகை திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப் பட்ட நலத்திட்டங்களல் இலவசம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு விலையில்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி யது.
ஆனால் தற்போதைய திமுக அமைச்சர்கள் இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தி பொதுமக்களை கேலி செய்து விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு பேசும் அமைச்சர்கள் மீது முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில் உள்ளார்.
ஆர். கே. நகர் தொகுதி மக்கள் மீது முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது உதவியாளர் மூலம் என்னை அழைத்து அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
மேலும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவ தில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தற்போது ஆர் கே நகர் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவ தில் திமுக அரசு பாரா முகத்துடன் செயல்பட்டு வருகிறது.
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுகவினர் அணிவாரியாக பிரிந்து கிடக்காமல் எல்லோரும் ஒரே அணியாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றார் பாண்டியராஜன்.
   இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏ கணேசன், கோவை சத்தியன், சீனிவாச பாலாஜி,  நித்யானந்தம்,  ஆர் .எஸ். ஜனார்த்தனன், இளங்கோவன், பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேச்சால் சர்ச்சை: 
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் உள்ளது எனவே இதில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தோடு இணைந்து ஜெயலலிதாவின் உருவ பொம்மையை திடீரென ஆர்.கே. நகர் தொகுதிக்கு கொண்டு வந்து இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது அப்போதே சர்ச்சையான நிலையில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு  அந்தப்பிரசாரத்திற்கு தடை விதித்தது. தற்போது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பித்து சசிகலா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ள நிலையில் ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ஆரோக்கியத்தோடு இருந்து நலத்திட்டங்களை செய்ய தனக்கு உத்தரவிட்டார் என்று பாண்டியராஜன் பேசியிருப்பது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது .
அப்போது பன்னீர்செல்வம் அணியில் இருந்த ஒரே அமைச்சரான பாண்டியராஜன் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் உள்ளார். பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட எந்த அணியினரையும் தங்களோடு இணைத்துக் கொள்ள முடியாது என்று எடப்பாடி கே பழனிச்சாமி தொடர்ந்து வலியுறுத்து வரும் நிலையில் அனைத்து அணிகளும் ஒன்றிணைய வேண்டும் என பாண்டியராஜன் தெரிவித்த கருத்து அக்கட்சியினர் இடையே சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top