Close
நவம்பர் 25, 2024 4:03 மணி

இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஈரத்தோடு தேரோட்டிய சாரதி..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அமரர் ஊர்தி ஓட்டுநர் திருமண விழாவில் பங்கேற்று வாழ்த்திய கவிஞர்தங்கம்மூர்த்தி, டாக்டர் வீ.சி.சுபாஷ்காந்தி உள்ளிட்டோர்

6000 எண்ணிக்கையில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஈரத்தோடு தேரோட்டிய சாரதி புதுக்கோட்டை. கே. முத்துக்குமார்…!

புதுக்கோட்டை மாவட்டத்தில்  கடந்த 14 ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறாயிரத் திற்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு அரசு இலவச அமரர் ஊர்தி மூலமாக அவர்களை அடக்கம் செய்வதற்கு அரசு மருத்துவமனைகளில் இருந்து எவ்விதக் கட்டணமும் இல்லாமல் அவர்களின் சொந்த ஊர்களுக்கு உடலை ஒப்படைத்த  ஓய்வறியா உழைப்பாளி  முத்துக்குமார்…!

இது குறித்து டாக்டர் வீ.சி. சுபாஷ்காந்தி கூறியதாவது:

தமிழ்நாடு சுகாதார திட்ட அலுவல ராக 2012 -ஆம் ஆண்டு பணி ஏற்ற நாளிலிருந்து எனக்கு நன்கு பழக்கம். ஒரு முறை முத்துக்குமாரிடம் உன் வண்டியில் உடலை எடுத்துச் செல்லும்போது நான் உன்னுடன் பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டேன். சார் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தார்.

நான் கட்டாயப்படுத்தி அவருடன் பயணம் செய்ய முற்பட்டேன். அப்பொழுதுதான் அந்த வண்டியின் நிலை, முத்துக்குமார் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ள முடியுமென்று… ஒரு நாள் ஒரு உடலை அண்டக்குளம் பகுதிக்கு எடுத்துச் செல்லும்போது அவருடன் பயணம் செய்தேன்…

பயணத்தின்போது முத்துக்குமாரிடம்” இரவு நேரங்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும்போது உனக்கு எப்படி இருக்கும்” என்று கேட்டேன்… சார் பாடியோட சொந்தக்காரங்க கூட இந்த வண்டியில் வராம வேற வண்டியில் வருவாங்க… நான் ஓட்ட அந்த பாடி மட்டும் பின்னாடி இருக்க பயணம் செய்வேன்… அது பழக்கம் ஆகிடுச்சு என்றார்… .

வலியை உணர்ந்தேன்… அந்த உடலை ஒப்படைக்கும் வழி வந்தது… உறவினர்கள் சூழ… முத்துக்குமார் சென்று வண்டியின் கதவை திறக்க… கதறி அழுது கொண்டு வண்டியின் கதவுகளை அடித்தனர் சிலர்… உடல் இருக்கும் ஸ்ட்ரக்சர் தர மறுத்தனர் சிலர்… என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த முத்துக்குமார் சிறிது நேரம் காத்திருந்து அவர்களிடம் கெஞ்சி ஸ்ட்ரக்சர் பெற்று வந்து மீண்டும் கிளம்பினோம் புதுக்கோட்டை நோக்கி…!

பத்தாம் வகுப்பு படித்து இருக்கும் முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் குருக்களாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்… முத்துக்குமாரின் சேவையை போற்றி புதுகை பூங்கொத்து அமைப்பின் மூலம் புதுக்கோட்டை நகராட்சி நவீன எரிவாயு இடுகாட்டில் குழந்தைநல மருத்துவர் ராமதாஸ் அவர்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் பரிமளா தேவி ஆகியோரால்  முத்துக்குமாருக்கு சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கொரோனா இறப்பு முதல் சில நூறு கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடலை முத்துக்குமார்தான், கவச உடை அணிந்து முன்கள பணியாளராக களத்தில் நின்று,தான் எப்போதும் ஈரம் உள்ளம் கொண்ட சாரதி என்பதனை நிரூபிக்கும் வகையில் அந்த உடல்களை அடக்கம் செய்திட உதவி இருக்கிறார்… ஊடக வெளிச்சம் இல்லாமல்…!

முத்துக்குமாரை பார்க்கும் போதெல்லாம் திருமணம் எப்போது என்று கேட்பேன்… சார் இலவச அமரர் உறுதி ஓட்டுனராக இருப்பதால் பெண் தர யோசிக்கிறார்கள் சார்… என்று வருத்தப்படுவார்… நல்லது நடக்கும் என்று சொல்வேன்!…

ஒரு வழியாக முத்துக்குமாருக்கு  (30.10.22) அன்று திருமணம் நடந்தேறியது. புதுக்கோட்டையின் புகழ் கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்தி  தலைமையில்  தமிழினி குழுவினர், வரலாற்று ஆய்வாளர் ஜெ. ராஜாமுகமது  உள்பட திரளானோர் நேரில் சென்று வாழ்த்தினோம்.
புதுக்கோட்டை எப்போதும் முத்துக்குமார் பக்கமே..! புகைப்படத்தில் மட்டுமல்ல புன்னகை மலரும் முத்துக்குமார் மற்றும் அவரது இணையர் ஜோடி வாழ்விலும்..! என்றார் டாக்டர் வீ.சி. சுபாஷ்காந்தி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top