சோழவந்தானில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில், அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கழிப்பறை கட்டுவதற்கு முடிவு செய்து அங்கு பணிகள் தொடங்கப்பட்டது.
சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு பகுதியான வட்ட பிள்ளையார் கோவில் அருகில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இந்தக் கழிப்பறை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.
மேலும், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா சுமார் 17 நாட்கள் நடைபெறும் அப்போது பால்குடம் அக்னிச் சட்டி மற்றும் தீர்த்தவாரி போன்ற நிகழ்ச்சிகள் வைகை ஆற்றில் நடைபெறுவது வழக்கம்.
அவ்வாறு, நடைபெறும் போது சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வைகை ஆற்றில் கூடுவது வழக்கம்.
அவ்வாறு பொதுமக்கள் கூடும் இடமான வட்ட பிள்ளையார் கோவில் அருகில் கழிப்பறை கட்டுவதால் இட நெருக்கடியும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறி பொதுமக்கள் மாற்று இடத்தில் கழிப்பறை கட்ட வேண்டும். இந்த இடத்தில் கழிப்பறை கட்டக்கூடாது என்றும் எதிர்ப்பை மீறிகட்டும் பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி பஸ் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த போவதாக தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து, எட்டாவது வார்டு பொதுமக்களில் சிலர் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு சென்று கழிப்பறை கட்டும் திட்டத்தை உடனே கைவிட பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினார். இதனால் ,அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து கழிப்பறை கட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.