Close
நவம்பர் 22, 2024 5:23 மணி

உலக அரங்கில் இந்தியா முன்னேற உயர்தரக் கல்வி அவசியம்: ஐ.நா. அரசியல் விவகாரக் குழு அலுவலர் ஆர் கண்ணன் பேச்சு

சென்னை

திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிந்தனை சாரல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஐநா சபை அரசியல் விவகார குழு அலுவலர் முனைவர் ஆர். கண்ணனுக்கு நினைவு பரிசை வழங்கிய வாசகர் வட்ட தலைவர் என். துரைராஜ். உடன் நூலகர் பானிக் பாண்டியன் வாசகர் வட்ட நிர்வாகிகள் கே சுப்பிரமணி ஏ மதியழகன் ஆகியோர்

உலக அரங்கில் இந்தியா அனைத்து நிலைகளிலும் உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் எனில் உலக தரத்திலான உயர்தர் கல்வி அவசியமானது என சோமாலியா நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார துறை அலுவலராக பணியாற்றும் முனைவர் ஆர் கண்ணன் தெரிவித்தார்.
சென்னை  திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் சிந்தனை சாரல் 62 -ஆவது மாதாந்திர நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் என். துரைராஜ் தலைமை வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சோமாலியா நாட்டில் ஐ நா அரசியல் விவகார குழு அலுவலராக பணியாற்றும் முனைவர்  கண்ணன் கலந்து கொண்டு  மேலும்  பேசியது:
சென்னை
உலகில் மூன்றரை ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. ஆனால் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 20 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியையும், சீனா 15 ட்ரில்லியன் வளர்ச்சியும் பெற்றுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் மக்கள் தொகை அடிப்படையில் சீனாவை மிஞ்சி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என கருத்துருக்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகளவில் ஃபார்ச்சூன் 500 என்ற பெரிய நிறுவனங்களில் 58 நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றி வருவது இந்தியர்களுக்கு பெருமை அளிக்க கூடியது.
எனினும் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ள 500 பெரும் நிறுவனங்களில் 124 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவை, 121 நிறுவனங்கள் அமெரிக்காவை சேர்ந்தவை,  60 நிறுவனங்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்தவை,  ஆனால் இந்த 500 நிறுவனங் களில் 9 நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவை சேர்ந்தவையாக உள்ளன.
அதிலும் எல் ஐ சி, ஸ்டேட் பாங்க், ஓஎன்ஜிசி, ஐஓசி, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும். இது தவிர நான்கு தனியார் நிறுவனங்கள் இதில் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே பெரும் நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றினாலும் கூட இந்திய நிறுவனங்கள் இந்த பட்டியலில் அதிக அளவில் இடம்பெறாதது நமது நிலையை எடுத்துக்காட்டுகிறது.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை:  உலக அரங்கில் இந்தியா மிக வலிமையான நாடாக உருவெடுத்து வருகிறது என்று நாமெல்லாம் பெருமைப்படும் நிலையில் ஐ நா சபையின் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளோடு இந்தியா சேர்த்துக் கொள்ளப்படுவதில் தொடர்ந்து தாமதம் இருந்து வருகிறது.
 உலக நாடுகளின் பல்வேறு அமைப்புகளில் இந்தியா இடம் பெற்றிருந்தாலும்  உச்சகட்ட அதிகாரம் பெற்ற ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியா இடம் பெற்றால் மட்டுமே உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு மேன்மை பெற்றதாக நாம் கருத முடியும்.
உலக வரலாற்றை புரட்டி போட்ட கவுதம புத்தரை உலகிற்கு அளித்ததே இந்தியா தான் மனித குலத்திற்கு புத்தர் அளித்த போதனைகள் 2400 ஆண்டுகளை கடந்தும் உயிரோட்டத்தோடு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் புத்தரின் தாக்கம் இல்லாமல் போய்விட்டது வருத்தத்திற்கு உரியது.
ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்  ஆனால் இதில் சுமார் 55 லட்சம் பேர் இந்திய உறவினர்கள் ஆவார்கள். ஆனால் சீனாவிற்கு ஆண்டுக்கு சுமார் 6 கோடி பேர் சுற்றுலா பயணிகளாக  வருகை தருகின்றனர். சுமார்  5 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய நாடான மாலத்தீவுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்தியா முன்னேறுவது எப்போது? ரிஷி சுனக், கமலா ஹாரிஸ் , கூகுள் பிச்சை, லட்சுமணன் உள்ளிட்ட இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளியினர் பலரும் உலக அரங்கில் பலரும் முக்கிய பொறுப்பில்  இடம் பெற்றிருப் பதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் பெருமை கொள்ள முடியாது.
உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 200 இடங்களில் இந்தியாவின் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.  உலக நாடுகள் வரிசையில் முன்னேறிய நாடு என்ற இடத்தில் இந்தியா வந்தாக வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு.
எதிர்காலத்தில் இந்த உன்னத நிலையை அடைய வேண்டு மெனில்  இந்தியாவின் கல்வி முறை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.  இதன் மூலம் தொழில் வளர்ச்சி, மனித வள மேம்பாடு, விஞ்ஞான வளர்ச்சி உள்ளிட்டவைகள் மூலம் உலக அரங்கில் தள்ளிகரற்ற நிலையை இந்தியா எட்ட முடியும். இதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றார் கண்ணன்.
இந்நிகழ்ச்சியில் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் கே. சுப்பிரமணி,ஏ. மதியழகன் நூலகர் பானிக் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top