புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளம் நிரம்பியது.
அடுத்ததாக மழை பெய்தான் உபரி நீர் வடி மதகு வழியாக சாலைகளில் வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. சாலைகளில் உபரி வெளியேறுவதைத் தடுத்து முறையாக கால்வாயில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ராஜாராமச்சந்திரத் தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான திவானாக இருந்த சேஷையாசாஸ்திரி 1883-84 –ம் ஆண்டில் புதுக்கோட்டை நகரில் இருந்த அனைத்துக் குளங்களும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அதில் நகரின் மையப்பகுதியில் உள்ள பல்லவன்குளமும் தூர்வாரப்பட்டு அழகு படுத்தப்பட்டது. அப்போது இந்தக்குளத் துக்கு சிவ கங்கை என திவான் பெயரிட்டார். எனினும், இன்று வரை பல்லவன் குளம் என்றுதான் அழைக்கப்படுகிறது.
புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள சுமார் 40 குளங்களில் சிவன் கோயில் அருகே அழகுற அமைந்திருப்பது இக்குளம் என்றால் மிகையில்லை. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தீர்த்தமாடு வதும், முன்னோர்களுக்கு திதி கொடுக்க காசி, ராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் தங்கள் கடமைகளை இங்கு நிறை வேற்றுவதும் வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆட்சிகாலத்தில் நகராட்சி நிர்வாகம் இக்குளத்தை ரூ. 10 லட்சம் மதிப்பில் தூர் வாரப்பட்டது. தற்போது பெய்த மழையால் குளம் நிரம்பியது.
பல்லவன் குளத்தில் தண்ணீர் நிரம்பிய நிலையில் மேலும் உபரிநீர் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் மழை அதிகமாக பெய்யும் போது பல்லவன் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகே உள்ள சாந்தநாத சாமி கோவிலுக்குள் புகுந்துவிடுவது உண்டு.
மேலும் வெளியேறும் தண்ணீர் கால்வாய் வழியாக பூ மார்க்கெட் சந்தில் பாய்ந்தோடும். இதனை தவிர்ப்பதற்காக பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பான முறையில் தண்ணீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
பல்லவன்குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாரி வாய்க்கால்களில் இருந்து தண்ணீரை பிரித்து அனுப்பவும், கழிவுநீர் கலக்காமல் இருக்கவும் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தலைமையிலான அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறக்கூடிய பகுதியில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதில், நகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்ஏஎஸ். சேட், வளர்மதி-சாத்தையா, செந்தாமரை- எம்.எம். பாலு மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.