Close
செப்டம்பர் 20, 2024 7:04 காலை

தஞ்சை ராமமூர்த்தி முதலாண்டு நினைவேந்தல்… அனைத்துக்கட்சியினர் அஞ்சலி

தஞ்சாவூர்

தஞ்சை ராமமூர்த்தி நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றோர்

தஞ்சை இராமமூர்த்தியின் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சையார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தஞ்சை அ.இராமமூர்த்தி தஞ்சையின் மூத்த வழக்கறிஞரும், அனைத்து கட்சிகளும் நேசித்த, அன்பு செலுத்திய மூத்த அரசியல்வாதியுமாவார்.

தஞ்சையார் அரசியல் தலைவர்களில் தனித்துவம் மிக்கவர் எழுத்து பேச்சு, சிந்தனை, துணிவு, பணிவு என பன்முகத் தன்மை கொண்ட செயலாற்றல் மிக்கவர். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, வி.பி.சிங், சந்திர சேகர், முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் தமிழ் திரையுலக சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன் என பல்வேறு தலைவர்களின் அன்பை பெற்று அவர்களோடு பயணித்தவர்.

வழக்குக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஆஜராவதில்லை. பணம் கொடுக்க முடியவில்லை என்பதற்காக வழக்கு நடத்த மறுப்பதில்லை என்ற கொள்கைகளை நோக்கமாகக் கொண்டு  அதன்படி வாழ்ந்து  காட்டியவர்.

முதன் முதலில் தமிழில் வாதாடியும் வழக்காடு முறையை எளிமைப்படுத்திய தோடு இளம் வழக்கறிஞர்களை உற்சாகப்படுத்தியவர். தமிழ் பற்று, தமிழர்கள் உரிமை, சமூக நீதி என பல்வேறு தளங்களில் பயணித்தவர் புத்தர், விவேகானந்தர், வள்ளலாரைப் பற்றி புதிய பார்வையோடு சிறந்த நூல்களை எழுதியது போன்ற பல்வேறு சம்பவங்களை  இதில் பங்கேற்றவர்கள்  நினைவு கூர்ந்து பேசினர்.

நிகழ்வில் முன்னாள் நிதித்துறை இணையமைச்சர், தற்போதைய தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். எஸ் .பழனிமாணிக்கம், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் சி.நா.மி உபயத்துல்லா, காங்கிரஸ்கட்சி மாவட்ட தலைவர் பி. ஜி. ராஜேந்திரன், திராவிட கழக மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என். சீனிவாசன்.

தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக்குழு செயலாளர் அயனாவரம் சி.முருகேசன், மதிமுக மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநில துணை பொதுச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ரங்கசாமி,மாவட்ட மாநகர செயலாளர் ப.ராஜேஸ்வரன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், நீல புலிகள் கட்சியின் தலைவர் புரட்சிமணி, தோழியர் செம்மலர்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சை ராமமூர்த்தி திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் அனைத்து கட்சி நிர்வாகிகள், தஞ்சையாரின் துணைவியார் சரஸ்வதி, மகள் வழக்கறிஞர் அம்மு மற்றும் குடும்பத்தினர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தஞ்சையார் எழுதிய நூல்கள் பரிசளிக்கப்பட்டது. முன்னதாக அ.சுவர்ணா அண்ணாவு வரவேற்றார். முடிவில் தஞ்சை ராமமூர்த்தியின்  மகன் அப்பு நன்றி கூறினார்.

முன்னதாக, தஞ்சை வழக்கறிகள் சங்க சார்பில் கடந்த11ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மூத்த வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான தஞ்சை அ.ராமமூர்த்தி படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எம்.அக்பர் அலி படத்தினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் .

மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இ.மதுசூதனன், அரசு வழக்கறிஞர் அ.சண்முகசுந்தரம், பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன், உறுப்பினர் எம். ஆர். ஆர் சிவசுப்பிரமணியன் மூத்த வழக்கறிஞர்கள் கே. வைத்திலிங்கம், புலமை வெங்கடாசலம், ராஜேந்திரன், சி.சந்திரகுமார், வெ.ஜீவக்குமார், வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top