புதுக்கோட்டை அருகே குசலக்குடியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபத்திருநாள் வருகிற டிசம்பர் 6 -ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு வடிவங்களில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் புதுக்கோட்டை அருகேயுள்ள குசலக்குடியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.பல்வேறு வடிவமைப்புகளில் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது.
இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் புதுக்கோட்டை திருச்சி கரூர், தர்மபுரி, ஈரோடு, மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் பாலமுருகன் கூறியதாவது: இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பரம்பரையாக குடும்பத்துடன் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
சீசனுக்கேற்ப பொங்கல் பானை, அடுப்பு பானை, சட்டி அகல் விளக்குகள் .அருகாமையிலுள்ள ஓட்டக்குளம் மற்றும் சானாதி உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுத்து வந்து பலவித மாக அகல் விளக்குகளை நாங்கள் தயாரித்து வருகிறோம்.
இதற்கு மூலப் பொருட்களான மண் மற்றும் எரிக்க பயன்படும் விறகு, வைக்கோல் போர் போன்றவை விலை ஏற்றமாகியுள் ளது மழை வந்தால் மண்பாண்டத் தொழில் முழுவதும் பாதிக்கும். வெயில் இருந்தால்தான் மண்ணால் தயாரித்த பாண்டங்களை காய வைக்க முடியும்.
மெழுகு மற்றும் பீங்கான், உலோக விளக்குகள் போட்டிக்கு வந்துவிட்டதால், இத்தொழிலில் போதிய லாபம் கிடைக்க வில்லை . எதிர்பார்த்த வருமானம் இல்லாத போதிலும், பாரம்பரிமாகச் செய்து வரும் குலத்தொழிலை விட்டு விடக்கூடாது என்பதால் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். நாள் ஒன்றுக்கு ஆயிரம் விளக்குகள் வரை தயாரிப்போம். எங்களிடம் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வங்கி கடனுதவி , உபகரணங்கள் வழங்கி உதவ வேண்டும். மேலும், இந்தப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச மின்திருவை அனைவருக்கும் வழங்க வேண்டும். ஏரியில் மாட்டுவண்டி மூலம் மண் எடுக்க அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.