Close
செப்டம்பர் 20, 2024 9:45 காலை

பணி பாதுகாப்பு  வழங்கக் கோரி சுமை பணியாளர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு

ஈரோடு

ஈரோடு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்த சுமைப்பணியாளர்கள்

பணி பாதுகாப்பு  வழங்கக் கோரி சுமை பணியாளர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு

பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமை பணியாளர்கள் ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டுமெனக்கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பொது தொழிலாளர் சுமைதூக்குவோர் சங்க தலைவர் மனோகரன் தலைமையில் ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க பொதுச் செயலாளர் தென்னரசு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் தெய்வநாயகம், ஈரோடு மாவட்ட சுமை பணியாளர் சங்கம் சிஐடியு தலைவர் தங்கவேல், பாட்டாளி சுமை தூக்குவோர் சங்க செயலாளர் முனியப்பன் ஆகியோர்  அளித்துள்ள மனுவில் கூறியதாவது :

சுமார் 12,000 -க்கு மேற்பட்ட சுமை பணியாளர்கள் எங்கள் சங்கங்களில் உள்ளனர் கடந்த 50 ஆண்டுகளாக சங்கங்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வப்போது கூலி உயர்வு செய்யப்படும். ஆனால் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

ஈரோடு ஆர்டிஓ தொழிலாளர் பிரச்னை சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பாணை அனுப்பியும் அதை நிராகரித்தது.  கடந்த நவம்பர் 15 -ஆம் தேதி வி.ஆர்.எல். லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் லாரி நிறுவனம் 7 பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுக்காமல் பணியிடை நீக்கம் செய்தது.

போலீஸ் தலையிட்டு பேச்சு நடத்தியதன் பேரில் போனஸ் வழங்குவதாக அந்நிறுவனம் கூறியது. ஆனால் வட மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது. இதனால் சுமை பணியாளர்கள் இரண்டு நாள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் நிர்வாகி ஒருவர் தொழிலாளர்கள் மீது இருசக்கர வாகனத்தை இடித்ததால், அவர் தாக்கப்பட்டார்.

நான்கு தொழிலாளர்களும் காயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே  இப்பிரச்னையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உடனடியாக தலையிட்டு சுமை பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்த கூலிக்கு வட மாநில பணியாளர்களை பணி அமர்த்துவதை தடுக்க வேண்டும். தற்போது ஈரோட்டில் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் நிலைப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு பிரச்னையை பேசி சமூக தீர்வு காண வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top