Close
நவம்பர் 22, 2024 5:21 மணி

117 ஆண்டுகள் பழைமை கொண்ட தொடக்கப் பள்ளிக்கு ரூ.2.75 லட்சம் செலவில் மேஜை, நாற்காலிகள்

சென்னை

திருவொற்றியூரில் 117 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தொடக்கப்பள்ளிக்கு ரூ. 2.75 லட்சம் செலவில் மேஜை, நாற்காலிகளை வழங்கிய இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள். உடன் தாளாளர் இன்பநாதன், தலைமை ஆசிரியை கஸ்தூரி மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.

சென்னை திருவொற்றியூரில் 117 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தொடக்கப் பள்ளிக்கு ரூ. 2.75 லட்சம் செலவில் சாய்தள மேஜை, நாற்காலிகளை இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வியாழக்கிழமை வழங்கினர்.

சென்னை மாநகரத்தின் ஒட்டிய கிராமமாக இருத்த முக்கிய ஊர்களில் திருவொற்றியூரும் ஒன்றாகும். இங்கு தற்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலை பெரியார் நகர் பகுதியில் மெட்ராஸ் தமிழ் மிஷன் தொடக்கப்பள்ளி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தன்னார்வ அறங்காவலர் குழுவால் நடத்தப்பட்டு வந்த இப்பள்ளி பின்னர் அரசு உதவி பெறும் பள்ளியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அறங்காவலர்கள் பலரும் காலமானதையடுத்து இப்பள்ளியின் நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆளுகையில் உள்ளது.

தற்போது 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இப்பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இப்பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு உயர் பணிகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவர்கள் சிலர் முன் வந்தனர்.

இதனையடுத்து ரூ. 2.75 லட்சம் செலவிலான மாணவர்கள் அமர்வதற்கான சாய்தள மேஜை, ஆசிரியர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்டவைகளை வியாழக்கிழமை வழங்கினர்.  அப்போது தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் இன்பநாதன், தலைமை ஆசிரியை கே.கஸ்தூரி,   முன்னாள் மாணவர்கள் வழக்குரைஞர் வி.எஸ்.ரவி,  சி.கோபால்,   ஆர்.தங்கவேலு, ஜெ. மும்மூர்த்தி, எஸ் கருணாகரன், எஸ் சரவணன்,ஜெ எழில்வேலன், எம் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top