பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தில் 15% குறைக்கப்பட்டதற்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 3 -ஆவது செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.ஈரோடு பைனான்ஸ் அசோசியேஷன் தலைவர் முத்துசாமி வரவேற்றார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் அறிகை சமர்ப்பித்துப் பேசினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், ஈரோடு தொழில் வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நிச்சயம் உறுதுணை யாக இருப்பேன் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த பின்னரும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும், பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தில் 15% குறைக்கப்பட்டதற்கும் தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அதே நேரம் அக்கட்டணத்தை முழுமையாக குறைக்க வேண்டும். நிலுவை விற்பனை வரிகளை தள்ளுபடி செய்ய தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், எதிர் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான மசோதாவை அரசு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க இயக்குனர் சிவகுமார் நன்றி கூறினார்.இதில், சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.