Close
நவம்பர் 22, 2024 4:08 மணி

அரசே தரமற்ற விதைக்கடலையை விற்பனை செய்யலாமா… விவசாயிகள் சங்கம் கேள்வி…

புதுக்கோட்டை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கை

தனியார் கொள்ளை லாபம் ஈட்டும் வகையில் அரசே தரமற்ற விதைக்கடலையை விற்பனை செய்யலாமா என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, செயலாளர் ஏ.ராமையன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அளவுக்கு அதிக அளவில் பருவமழை பெய்துள்ளது. மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கத்தால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் போதுமான அளவுக்கு மழை அளவு பதிவாகவில்லை. கடந்த சில மாதங்களாக ஓரளவிற்கு பருவமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்சி அடைந்துள்ளனர். இந்த மழையை நம்பி விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், வாழை மற்றும் கடலை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகள் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட வட்டாரங்களில் அதிக அளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே அதிக அளவில் கடலை அறவை மில்களும், அதனையொட்டி ஆயில் மில்களும் ஆலங்குடியில்தான் உள்ளன.

நவம்பர், டிசம்பர் மாதங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்ற காலம். இந்த மாதங்களில் சாகுபடிசெய்யப்படும் கடலை அதிக மகசூல் தருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், விவசாயிகள் தங்களது நிலங்களில் இந்த மாதங்களில் மற்ற சாகுபடிகளைத் தவிர்த்து நிலக்கடலை பயிரிட விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு விதைக்கடலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

கடந்த மாதங்களில் ஓட்டுடன் கூடிய விதைக்கடலை கிலோ ஒன்றுக்கு 80 முதல் 100 ரூபாய் வரை வெளி மார்க்கெட்டில் விற்கப்பட்ட நிலையில், தற்பொழுது 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு நிலக்கடலை சாகுபடி செய்ய விதைக்கடலைக்கு மட்டுமே ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இது விவசாயிகளுக்கு எந்த வகையிலும் கட்டுபடியானது இல்லை.

பொதுவாக, வேளாண் விரிவாக்க மையங்களில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள் வெளிமார்க்கெட்டைவிட தரமாகவும் விலை விலையில் மலிவாக கிடைக்கும். ஆனால் நிலக்;கடலை அவ்வளவு தரமானதாக இருப்பதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேநேரத்தில் ஓட்டுடன் கூடிய விதைக்கடலை கிலோ ஒன்றுக்கு ரூ.60-க்கு வேளாண் விற்பனை மையங்ளில் விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.150 கொடுத்து வாங்குவதற்கு வழியில்லாமல் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஆனால், அங்குள்ள விதைக்கடலை கடந்த காலங்களைவிட மிக மிக மோசமா தரமற்ற நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றானர். 10 கடலை விதை இருந்தால் அதில் 3 விதைகூட முளைப்புத் திறன் உள்ளதாக இருப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். அதையும் வேறு வழியோ இல்லாமல் விரிவாக்க மையங்களில் வாங்க வருபவர்களிடம் இருப்பு இல்லை என அலுவலகர்கள் பெரும்பாலான நேரங்களில் கையை விற்கின்றனர்.

உளுந்து, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகளை மிகத்துள்ளி யமான தரத்துடன் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வேளாண்மைத்துறை விதைக்கடலைக்கு மட்டும் ஏன் அக்கறை செலுத்துவதில்லை? ஏன் வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்து விவசாயிகளுக்குத்தர வேண்டும்?.

வேளாண் துறையே விதைக்கடலையை உற்பத்தி செய்யக்கூடாதா? அல்லது குறிப்பிட்ட விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து தரமான விதைக்கடலையை உற்பத்தி செய்து அதை கொள்முதல் செய்து விவசாயிகளுக்குக் தரக்கூடாதா? இதில் உள்ள உள்நோக்கம் என்ன? தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க அரசே வலிவகுத்துக் கொடுக்கிறதா என்கிற கேள்வி எழுவது நியாம்தானே.

தமிழக அரசும் வேளாண் துறையும் இதுகுறித்து தீவிர அக்கறை செலுத்த வேண்டும். போதுமான விதைகளை வேளாண்மைத்துறையே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் கடலைக்கு கட்டுபடியான விலைகிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு வசதியாக போதுமான சேமிப்புக் கிடங்குகளை அமைத்துத்தர வேண்டும். இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைத் திரட்டி மிக்கப் பெரிய போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top