Close
நவம்பர் 22, 2024 12:38 காலை

அலமாரியிலிருந்து புத்தகம்…இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின்..

உலகம்

இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின்

பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வினின் “இயற்கைத் தேர்வு மூலம் உயிரினங்களின் தோற்றம்” – ஒரு அற்புதமான அறிவியல் படைப்பு, நவம்பர் 24, 1859 அன்று இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.

டார்வினின் கோட்பாடு, அவர் “இயற்கை தேர்வு” என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறை நிகழ்வின் மூலம் உயிரினங்கள் படிப்படியாக உருவாகின்றன என்று வாதிட்டது. இயற்கையான தேர்வில், அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மரபணு மாறுபாடுகளைக் கொண்ட உயிரினங்கள், மாறுபாடு இல்லாத அதே இனத்தின் உயிரினங்களை விட அதிகமான சந்ததியினரை பரப்ப முனைகின்றன. இதன் மூலம் உயிரினங்களின் ஒட்டுமொத்த மரபணு அமைப்பில் ஒரு தாக்கம் உருவாகிறது என்றார்.

உயிரினங்கள் எப்போதுமே மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் எல்லாவித மாற்றங்களுமே எடுபடுவதில்லை. அந்த மாற்றங்கள் அந்தந்தச் சூழ்நிலையில் வாழ்வதற்கு ஏற்புடையவை என்கிற பட்சத்தில் அந்த உயிரினம் தப்பிப் பிழைக்கும்.

இல்லையேல் அந்த உயிரினம் அழிந்து விடும் என்றார். இந்தக் கருத்துக்கு அவர் இட்ட பெயர் “தக்கன பிழைத்து வாழ்தல்” என்பதாகும். இதில் புரிந்து கொள்ளப்பட்ட இன்னொன்றும் இருக்கிறது. அதாவது ஒரே உயிரினத்தின் இரு வேறு சாதகமான அம்சங்கள் அந்த உயிரினத்தை இருவேறு சூழ்நிலைகளில் வெவ்வேறாகப் பரிணமிக்க உதவலாம் என்பது.

இன்னொன்று.., ஒரு மாற்றம் ஏற்புடையதாக இருந்தாலும் அந்த மாற்றத்தை அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அது வரை மாற்றத்தைக் கொண்டு அந்த உயிரினம் தப்பி பிழைக்க வேண்டும்.

இப்படியாக.., உயிர்களின் பரிணாமம் பற்றிய ஒரு முழுமையான விளக்கத்தையும் டார்வினின் இந்த நூல் பேசுகிறது.
பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ழான் பாப்டிஸ்ட் டி லாமார்க் மற்றும் ஆங்கிலப் பொருளாதார நிபுணர் தாமஸ் மால்தஸ் ஆகியோரின் பணிகளால் ஈர்க்கப்பட்ட டார்வின், 1830 களில் ஹெச் எம் எஸ் பீகிள் கப்பலில் ஐந்தாண்டு ஆய்வுப் பயணத்தின் போது, அவரது கோட்பாட்டிற்கான பெரும்பாலான ஆதாரங்களைப் பெற்றார்.

கலபகோஸ் தீவுகள் மற்றும் நியூசிலாந்து போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்ற டார்வின், பல நாடுகளின் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் புவியியல் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெற்றார். இந்த தகவல், இங்கிலாந்துக்கு திரும்பிய பிறகு மாறுபாடு மற்றும் இனப்பெருக்கம் பற்றிய அவரது ஆய்வுகளுடன், அவரது கரிம பரிணாமக் கோட்பாட்டின் வளர்ச்சியில் விலைமதிப்பற்றதாக கருதப்பட்டது.

உயிரினங்கள் படி நிலையில் பரிணாமம் பெற்று வருவதை டார்வின் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து, பரிணாமக் கொள்கை இயற்கை , சமூக மாற்றத்திற்கான மெய்யியல் தத்துவத்திற்கு அடிப்படையானது என நிரூபித்துள்ளார். இது, மதங்களின், கடவுள் படைப்புக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதனால் மதங்கள் டார்வின் பரிணாமக் கொள்கைக்கு எதிராக தங்களுக்கு ஆதரவான அறிவியலாரை களத்தில் இறக்கியது. அது, இன்றும் தொடர்கிறது.

பெரும்பாலான விஞ்ஞானிகள் உயிர் அறிவியலின் பல புதிர்களைத் தீர்க்கும் இந்த கோட்பாட்டை விரைவாக ஏற்றுக்கொண்டனர், ஆனால் மரபுவழி கிறிஸ்தவர்கள் இந்த ஆய்வும், அதன் கோட்பாடுகளும் மதங்களுக்கு எதிரானது என்று கண்டனம் செய்தனர்.
மனிதனின் வம்சாவளி சம்பந்தமாக, குரங்கிலிருந்து மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரங்களை முன்வைத்த டார்வினின் கருத்துக்கள் மீதான சர்ச்சை ஆழமடைந்தது.

1882 இல் டார்வின் இறந்த நேரத்தில், அவரது பரிணாமக் கோட்பாடு பொதுவெளியில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரது அறிவியல் பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில், மன்னர்கள், ராணிகள் மற்றும் பிரிட்டிஷ் வரலாற்றின் பிற புகழ்பெற்ற நபர்கள் புதைக்கப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே யில் அடக்கம் செய்யப்பட்டார்.
மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியலில் அடுத்தடுத்து ஏற்பட்ட வளர்ச்சிகள் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின் மாற்றங்களுக்கு வழிவகுத்தன, கூடவே டார்வினின் கருத்துக்கள் மரபியல் துறையில் மையமாக சிறந்து விளங்கியது.

மனிதரில் மட்டுமல்ல,மற்ற எல்லா உயிர்களிலும் இப்பொழுதும் பரிணாம மாற்றம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. மாற்றம் ஒன்று தானே எப்போதும் மாறாதது. மாற்றம் இருக்கும் வரையில் பரிணாமமும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

டார்வினின் பரிணாம கோட்பாட்டிற்கான வயது,160 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எல்லாமே விஞ்ஞான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்வி கேட்கப்பட வேண்டும் என்று அவர், அவரின் தொடக்க கால பரிணாம உயிரியல் பயணத்தில் அணுகி இருக்கவில்லை. அப்படி தான் இருந்தது என்பதை அவர் வெளியிட்ட அறிக்கைக்கு பின்னான நியோ டார்வினச கோட்பாட்டு உருவாக்கம் நமக்கு உணர்த்துகிறது.
அதே வேளையில் மனிதனுக்கும், மனித குரங்கு இனத்திற்குமான ஒரு பொது மூதாதை இருந்திருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கிட்டத்தட்ட அறுபது வருடத்திற்கு முந்தைய கண்டுப்பிடிப்புகளான டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏவைப் பற்றிய ஞானம், டார்வின் காலத்தில் இருந்திருக்குமேயானால், பரிணாம கோட்பாட்டின் வீச்சே வேறுவிதமாக இருந்திருக்கும்.
குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை என்றாலும், இந்த இரண்டு இனங்களுக்குமான பொது மூதாதையர் குறித்த ஆய்வுகளும், அதை உறுதிப்படுத்தும் படியான தரவுகளும் வந்த வண்ணமிருக்கின்றன.படிமலர்ச்சி என்பது சில பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒன்றல்ல, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உறுதி செய்ய..,

தற்போது இந்த நுண் மரபியல் ஆராய்ச்சிக்கு அதிக சவால்களும், அதற்கான பொறுப்பும் அதிகம் இருப்பதால் எப்படி நாம் தோன்றினோம் என்கிற ஆராய்ச்சியை சில காலம் கிடப்பில் போட்டு விட்டோம் என்பதே உண்மை. தோன்றி விட்டோம். இருக்கும் வரை புகழோடு இருந்து விட்டு போவோம் என்று எண்ணியதால் கூட இருக்கலாம்.

டார்வின் வெளியிட்ட ‘உயிர்களின் தோற்றம்’ நூலும், மார்க்ஸ் வெளியிட்ட. ‘கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ நூலும் உலகைப் புரட்டிப் போட்ட புரட்சிகர நூல்கள் என்றால் மிகையாகாது .

..இங்கிலாந்திலிருந்துசங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top