Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

இந்தியாவும் – உலக கால்பந்து விளையாட்டும்..

உலகம்

உலக கால்பந்து போட்டிகள்-2022

இந்தியாவும் – உலக கால்பந்து விளையாட்டும்..ஓர் மீள் பார்வை..

1950 ஃபிஃபா உலகக் கோப்பையில் இந்தியா விளையாடு வதற்கு, மிகப்பெரிய கால்பந்து காட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு ஒரு வாய்ப்பு வந்தது, ஆனால் அந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என்று நம் தேசம் முடிவு செய்தது. போட்டியை வெறும் காலுடன் விளையாட விரும்பியதால், இந்திய அணி விளையாட அனுமதிக்கப்படவில்லை என்கிற கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் அது உண்மையான காரணம் அல்ல.

1950 உலகக் கோப்பை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரேசிலால் நடத்தப்பட்டது, ஆனால் அது பல பிரச்சனைகளில் சிக்கியது. பெரும்பாலான நாடுகள் தென் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதை தவிர்த்து வந்த நிலையில், போட்டியில் பங்கேற்க 13 நாடுகள் மட்டுமே பிரேசிலை சென்றடைந்தன. இந்தியாவுக்கு அழைப்பு விடப்பட்டது.

அந்த காலகட்டத்தில் நான்கு முறை உலக போட்டிகள் முடிவடைந்த நிலையில், உலக கோப்பை மீதான ஈர்ப்பை, இந்தியா சரியாக உள்வாங்கி கொள்ளவில்லை. உலகக் கோப்பையை விட ஒலிம்பிக் விளையாட்டு பெரியது என இந்தியா மதிப்பிட்டது.

கூடவே அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, நம் அணியை கப்பல் மூலம் அனுப்புவது பொருத்தமாக இருக்காது என கருதியது. பயணச் செலவுகளை தான் ஏற்று, நிதி உதவி செய்வதாக பிரேசில் முன்வந்த நிலையிலும், இந்திய கால்பந்து கூட்டமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்தது.

1950ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த சைலன் மன்னா, அப்போது உலகக் கோப்பையை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஒலிம்பிக்ஸ் தான் எங்களுக்கு எல்லாமே, அதைவிட பெரிதாக எதுவும் இல்லை என்கிற மன நிலையில் இருந்ததாக கூறினார்.

இது இப்படியிருக்க இந்தியா வெறுங்காலுடன் கால்பந்தாட் டத்தை ஆடியதா என்றால்! ஆம்… இந்திய கால்பந்து அணி வெறுங்காலுடன் விளையாடியது, அது 1948 ஒலிம்பிக்கில் நடந்தது. இந்திய அணி வெறுங்காலுடன் அல்லது காலுறை அணிந்து விளையாடியது.

அணியின் வீரர்கள் அனைவரும் அல்ல, பதினோரு வீரர்களில் நால்வர் பூட்ஸ் அணிந்து விளையாடியதாக சொல்கின்றனர். நம் வீரர்களுக்கு வெறும் காலுடன் விளையாடுவது வசதியாக இருந்தது என்பதால், அவர்களுடைய தேர்வு அதுவாக இருந்தது.

பிரான்சுக்கு எதிரான முதல் சுற்றில், 89 வது நிமிடத்தில் எதிரணி கோல் அடிக்கும் வரை இந்திய வீரர்கள் 1-1 என்ற கோல் கணக்கில் எதிரணியை தடுத்து நிறுத்தினர். இந்திய அணியின் அற்புதமான ஆட்டத்தை ரசித்த கிங் ஜார்ஜ் VI, சையத் அப்துல் ரஹீம் பயிற்சியளித்த இந்திய அணியை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்து விருந்து வைத்தார்.

1952 -ல் நடந்த ஒலிம்பிக்கில் ஹெல்சின்கியில், இந்தியர்கள் வெறுங்காலுடன் மீண்டும் விளையாடினர். யூகோஸ்லாவியா விடம் 10-1 என்ற கோல் கணக்கில் தோற்கடிக்கப்பட்டனர். மோசமான தோல்வியை தொடர்ந்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பு, தங்களுடைய வீரர்கள் பூட்ஸ் அணிந்து விளையாட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது.

1953 -ஆம் ஆண்டு வரை, ஃபிஃபா போன்ற பல சர்வதேச போட்டிகள் போட்டிகளின் போது காலணிகள் அணிவது பற்றிய எந்த விதிமுறைகளையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரி..,விசயத்திற்கு வருவோம். 2022 உலக கால்பந்தாட்ட போட்டி கத்தாரில் களைக்கட்டிய இன்றைய தேதியில், இனி இந்தியா எப்போது ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்கும். இது மிக விரைவில் நடக்கும். 23வது ஃபிஃபா உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறும் என்று நம் உள்ளுணர்வு சொல்கிறது.

2026 ஃபிஃபா அணிகளின் விரிவாக்கம் படி, 32 அணிகளில் இருந்து 48 அணிகள் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப் படும்.மூன்று அணிகள் கொண்ட 16 குழுக்கள் 32 அணிகள் கொண்ட நாக் அவுட் நிலை/ 32வது சுற்றுக்கு முன்னேறும்.
போட்டிகளின் எண்ணிக்கை 64ல் இருந்து 80 ஆக உயரும். வெவ்வேறு ஃபிஃபா கூட்டமைப்புகளில் இருந்து தகுதி பெற்ற நாடுகளின் எண்ணிக்கை உயரலாம். ஐரோப்பிய அணிகள் 13 முதல் 16 வரை உயர கூடும். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் தலா ஒன்பது அணிகள் இருக்கலாம்.

இதையெல்லாம் கூட்டி கழித்து பார்க்கும் போது, ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் தற்போதைய தரவரிசையில் 14 -வது இடத்தில் உள்ள இந்தியா, 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்று நினைக்கிறேன். முன்னதாக, இந்தியா 21 -வது இடத்தில் இருந்தது. ஆக மொத்தத்தில் இந்திய கால்பந்து அணியின் தரவரிசை ஆண்டுக்கு ஆண்டு முன்னேறி வருகிறது.

இது ஆரோக்கியமான அறிகுறி. அடுத்த வாய்ப்பை தவறவிட்டால், 2030 ல் இந்திய கால்பந்து வரலாற்றில், உலக கோப்பை விளையாட்டில் கால்பதிக்கும் ஒரு திருப்புமுனை யாக அமையும் என நம்புவோமாக..

…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top