Close
நவம்பர் 22, 2024 12:05 மணி

மக்கள் பிரச்னைகளை எதிர்கட்சிகளால்தான் வெளிப்படுத்த முடியும்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்து

மதுரை

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

மக்கள் பிரச்னைகளை எதிர்கட்சிகளால்தான் வெளிப்படுத்த முடியும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

முதலமைச்சர் விழாவில் பேசிய போது எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்துள்ளார். நாங்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. விமர்சனங்களை வரவேற்கிறேன்.  விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும். கையிலே ஆட்சி இருந்த போது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று உலக மகா உத்தமனை போல பேசுபவர்களுக்கு, விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை என்று பேசி இருப்பது, முதலமைச்சர் பதவி வைக்கின்ற அந்த பதவிக்கு  இலக்கணமான ஒரு தகுதியாக இல்லை.

மரபு மீறிய லட்சுமணன் கோடு தாண்டிய பேச்சாக முதலமைச்சருடைய பேச்சு அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு தகுதி என்பது முதலமைச்சர் நிர்ணயிப்பது அல்ல.  நாட்டு மக்கள் தங்கள் வாக்குரிமை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு , அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தான், முதலமைச்சரும் உருவாகிறார், எதிர்க்கட்சித் தலைவரும் உருவாகிறார். உங்களை போல் தந்தையின் கரம் பிடித்து, அரசியல் களத்திற்கு வந்தவர் அல்ல எடப்பாடி பழனிசாமி. தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி ஒரு சவால் விடுத்திருக்கிறார்,

அதில், கடந்த பத்தாண்டு அம்மாவுடைய அரசு செய்திருக்கிற திட்டங்களால் மக்கள் பெற்றிருக்கிற பயன்களை நேருக்கு நேராக விவாதிக்க தயார், ஆனால் , கடந்த 19 மாதங்களிலே இந்த நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்களை திமுக அரசு கொடுத்திருக்கிறீர்களோ அந்த திட்டங்களுக்கான பயன்கள் என்ன, இந்த மக்களுக்கு சேர்ந்திருக்கிறதோ அதை விவாதிக்க தயாரா?  என்று முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி கேட்டிருக்கிறார்.

நாங்களும் சட்டமன்றத்தில் இருந்து உங்களுடைய நடவடிக்கைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம் .நீங்கள் அதை செய்வோம் எதை செய்வோம் என்று 505 தேர்தல் வாக்குறுதிகள் தந்தீர்கள், அதுமட்டும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறபோது மின்சார கட்டண உயர்வு ஷாக்  அடிக்கிறது என்று சொன்னீர்கள்,இப்போது மின்சார கட்டணம் உங்களுக்கு  ஷாக் அடிக்கவில்லையா?

அதேபோல, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உங்கள் வீட்டுக்கு முன்பாக நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். இன்றைக்கு டாஸ்மாக் பார்கள் நாடெங்கும் இன்றைக்கு திறந்து இருப்பது உங்கள் கவனத்திற்கு வந்ததா வரவில்லையா ? அதேபோன்று 19 மாதங்களிலே 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள், பட்ஜெட் உரையில் அறிவித்த திட்டங்கள், மானிய கோரிக்கை அறிவித்த திட்டங்கள், இவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பழனிசாமி அறிவித்த திட்டங்களைத் தான் இன்றைக்கு நீங்கள் (ஸ்டாலின்) ரிப்பன் வெட்டி திறக்கிறீர்கள்.

மக்களாட்சி தத்துவத்தில் கேள்விகளைக் கேட்பதும், குறைகளை முன் வைப்பதும், விமர்சிப்பதும் எந்த திட்டங்களும், எந்த செயல்களும், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. எல்லாம் விவாதத்திற்கும், விமர்சனத்திற்கு உட்பட்டு பொது வாழ்க்கையில் இருக்கிற அனைவருக்கும் தெரிந்த விஷயம் முதலமைச்சருக்கு தெரியாமல் போய்விட்டதே என்பதுதான்  நம்முடைய மிகப்பெரிய கேள்வி .

கடவுளை நாம் இன்றைக்கு தினந்தோறும் பிரார்த்திக்கின்றோம், ஆனால் கடவுளை பற்றி விவாதம் எல்லா இடங்களிலும் உள்ளது.நம்மைப் பற்றி விமர்சிக்கிறார்களே என்று கடவுள் கோபித்து கொள்வதில்லை. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்றார் வள்ளுவர். அந்த குறள் முதல்வருக்கு நிச்சயமாக நினைவிருக்கும்.

முறை செய்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எடப்பாடியாரின் பிரதான கோரிக்கையாகும். ஆனால், பதில் சொல்ல உங்களுக்கு பதில் சொல்ல மனம் வரவில்லை.ஜனநாயகப் பண்பு உங்களிடத்தில் இருந்து மறைந்து போனதால், சர்வாதிகாரம் உங்களை அறியாமலோ, அறிந்தோ, தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் மனதிலே குடி புகுந்து விட்டது.  இந்த வார்த்தையினுடைய அடையாளம் எல்லாம் ஜனநாயகம் மறைந்து போய் சர்வாதிகாரம் தலை தூக்கி இருக்கிற ஒரு நிலையைத்தான் பார்க்கிறோம்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ரகசிய காப்பு பிரமாணங்களின்படி  பதவி  ஏற்றிருக்கிறீர்கள். இந்த தகுதியை கொடுத்த தாய்த்தமிழ்நாட்டு மக்கள். ஆகவே தான் இந்த  மக்களுக்கு நீங்கள் செய்வேன் என்று சொன்னதை செய்வீர்களா என்று கேட்பதிலே என்ன தகுதி வேண்டும். உங்களுக்கு வாக்களித்த, வாக்களிக்காத இந்திய குடிமக்கள், தமிழ் உணர்வாளர்கள் சமூக ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.

ஒரு கோடியே 49 லட்சம் தமிழக வாக்காளர்கள் எடப்பாடியாருக்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு முதலமைச்சர் பேசக்கூடாது. நாங்களும் சட்டசபையில் இருந்து உங்கள் கேள்விகளுக்கெல்லாம் எப்படி பதில் சொல்லியிருக்கிறோம், எப்படி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

மக்கள் பிரச்னைகள் எதிர்க்கட்சித்தலைவர் வாயிலாக தான் தெரிந்து கொள்ள முடியும், என்கிற அந்த ஜனநாயகம் மாண்பை முழுமையாக கற்றறிந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிசாமி  கேட்ட கேள்விக்கு  பதிலளிக்காமல் மறைத்த மர்மம் என்ன என்பதுதான் இன்றைய எதார்த்தமான கேள்வி. இந்த நிலையிலே, நீங்கள் சென்றீர்கள் என்றால் மக்கள் உங்களுக்கு எப்படி பாட புகட்டுவார்கள் என்ற வினாவுக்கு  வருகிற பாராளுமன்ற தேர்தல் அதற்கு விடையாக அமையும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top