புதுக்கோட்டையைச் சேர்ந்த காவலர் தம்பதி தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து மனித நேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்பது வெற்று வார்த்தைகளோ வெற்று முழக்கமோ இல்லை என்பது தினம் தினம் தமிழகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் நடைபெறும் உடல் உறுப்பு தானம் மூலம் நிஜமாகி வருகிறது.
நாட்டிலேயே முதல் முறையாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராகக் கொண்டு கடந்த 2014-இல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் (டிராஸ்ன்டான்) எனும் அமைப்பு, நிர்வாக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இதுவரை தமிழகத்தில் 1,198 கொடையாளர்களிடமிருந்து 6,886 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையின் மூலம் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் நாட்டிலேயே பிற மாநிலங்களைவிட முன்னிலையில் உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது.
இதற்காக தமிழகத்தில் மட்டும்தான் அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
பிரதமரின் மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி உரையில் கூட, தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக் கூடிய வகையிலும் செயல்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
உறுப்பு தான ஒதுக்கீட்டில் நிலையான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
இதுவரை மூளைச்சாவு அடைந்த 1,392 பேரின் 8,245 உறுப்புகள் தேவையானவர் களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் கூட 107 கல்லீரல், 183 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த6 பேருக்கு நுரையீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உடல் தானம், உடல் உறுப்புகளை பலரும் தாமாக முன் வந்து செய்து வருகின்றனர். தனது உடல் தகனம் செய்வது அடக்கம் செய்தல் போன்றவற்றால் எவருக்கும் பயனின்றி போவதை விட, உடல் உறுப்புகளுக்காக காத்திருந்து மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்ற உதவட்டுமே என்ற பரந்த எண்ணமும் மனித நேயமும் மேலோங்கி நிற்பதால் உடல் தானம் செய்வது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த கணவன்-மனைவி தங்களது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்து மனித நேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து விரிவாகப் பார்ப்போம்…. புதுக்கோட்டை சிப்காட் அருகே மருதுபாண்டியர் நகரில் வசித்து வருபவர் பிரபு(37). சென்ற 2010 –ல் காவல் துறையில் சேர்ந்த இவர் தற்போது இலுப்பூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறது. இவருக்கு கடந்த 2008 –ல் திருமணமாகி 10 வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கிறது. இவரது மனைவி தீபாபிரபு(36). இந்த தம்பதியர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
இது குறித்து முதல்நிலை காவலர் பிரபு கூறியது: இறந்த உடல் மண்ணில் புதைந்தோ அல்லது எரியூட்டியோ வீணாகப் போவதைவிட அந்த உடலை முழு மனதுடன் தானம் செய்தால் பலருக்கு பயனாக இருக்குமே என்ற எண்ணம் மேலோங்கியதே உடல் தானம் செய்ய தூண்டுகோலாக இருந்தது. இதற்கு ஊக்கம் கொடுத்தவர்கள் தாய்-தந்தைதான்.
உடல் தானம் செய்ய முடிவு செய்துவிட்டேன் என திருச்சி ஆயுதப்படையில் ஆய்வாளராக இருந்து தற்போது சென்னை வண்டலூர் துணை கண்காணிப்பாளர் பயிற்சியில் உள்ள எனது தந்தை மாரிமுத்து மிகவும் மகிழ்சியுடன் ஒப்புதல் அளித்தார். தந்தை முன் மொழிந்ததை தாயும் வழி மொழிந்தார். இது மிகவும் ஊக்கம் தருவதாக அமைந்தது.
என் வழியில், எனது காதல் மனைவியும் முழு மனதுடன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது.
உடல் தானம் செய்வதற்கான அரசு இணையதளத்தில் பதிவு செய்து அந்த விண்ணப்பத்தில் உள்ள பட்டியல்படி, கிட்னி, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம் மற்றும் கண், தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்தோம். அதன் பிறகு, உடல் தானம் செய்ததற்காக சான்றிதழ் கிடைத்தது.
எனது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால் எனது இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத் துடன் , நான் இறந்த பிறகு எனது உடல் உறுப்புகளான இதயம், சிறுநீரகம் , நுரையீரல், கல்லீரல், கணையம், என் விழிகள், மற்றும் தோல் ஆகியவற்றை தானம் செய்ய முன் வந்துள்ளேன். இதற்கு,தமிழக அரசும் அங்கீகாரம் செய்து, எனக்கு உடல் உறுப்பு தானம் செய்யும் அடையாள அட்டை கொடுத்துள்ளது.
எனது செயல் என்னைப் போல காவல் துறையில் பணியாற்றும் சக காவலர்களுக்கு முன் மாதிரியாகவும், மனிதனாக பிறந்த நாம் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஒரு நபருக்கு ஏற்படுத்தினால் போதும். அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றார் காவலர் பிரபு.