Close
செப்டம்பர் 20, 2024 5:39 காலை

வெட்டியான் புள்ளைன்னு மனசை காயப்படுத்தியதால் புத்தகத்துக்கு கொள்ளி வெச்சிட்டேன்..

கோயம்புத்தூர்

கோவையில் மயானத்தில் வேலை செய்யும் தொழிலாளி வீரபத்ரன்

வெட்டியான் புள்ளைன்னு மனசை காயப்படுத்தியதால் ஸ்கூல் புத்தகத்துக்கு கொள்ளி வெச்சிட்டு வெளியேறிவிட்டேன் என்கிறார் வீரபத்திரன்.

கோயம்புத்தூர்ல கண்ணப்பநகர் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரே இடம் சுடுகாடு தாங்க , சென்னைக்கு எப்படி கண்ணம்மாப்பேட்டை  போல கோவைக்கு இந்த கண்ணப்ப நகர் .

முன்ன பின்ன செத்தாதான் சுடுகாடு பத்தி தெரியும்னு சொல்லுவாங்க, அதனால நாம அங்க போய் பாக்கறதுக்கு வாய்ப்பு அதிகம் கிடைச்சு இருக்காது. அப்படியே போய் இருந்தாலும் நான் இன்னைக்கு சந்திச்ச இந்த நபரை சந்திக்க வாய்ப்பு இருந்திருக்காது . அப்படியே சந்திச்சு இருந்தாலும் நம் சூழ்நிலை காரணமாக மனதில் அவ்வளவாக பதிந்து இருக்காது. ஆனா யதேச்சையா இன்னைக்கு அவரை அந்த மாயானத்தில சந்திக்க வாய்ப்பு கிடைச்சது .

அவரை பார்த்து அண்ணா வணக்கமுங்க உங்களை ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கேன் , உங்களோட பேசனும்னு நினைப்பேன் , ஆனா நேரம் கிடைக்கலை இன்னைக்கு தான் நேரம் ஒதுக்கி உங்ககிட்ட பேசனும்னு வந்தேன் நல்லா இருக்கீங்களா , உங்களை பத்தி சொல்லுங்க உங்களோட இந்த வேலையை பத்தி சொல்லுங்க அப்படின்னு அவர்ட்ட கேட்டேன் , அதற்கு அவர் கொஞ்சம் வெட்கத்துடன் ,…

“என்ன அண்ணா நீங்க … நான் எல்லாம் ரொம்ப சாதாரண ஆள் தான் அண்ணா. என் பேர் வீரபத்திரன் பேர்ல தான் அண்ணா வீரம்.. ஆனா நிஜத்துல இங்க ஒன்னும் இல்லை .

என்னோட தாத்தா மிலிட்டரில வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனதும் இங்க வேலைக்கு வந்ததா சொல்றாங்க , அவருக்கு பிறகு எங்க அப்பா இந்த வேலை செய்துட்டு வந்தாரு . நாங்க கூடப்பிறந்தவங்க 6 பேரு நான் நாலாவது குழந்தையா பிறந்தேன் இப்போ வரைக்கும் குழந்தை உயரத்தில் தான் இருக்கேன் . ஒரு அண்ணன் மன உளைச்சல்ல தற்கொலை செய்துகிட்டாரு. மீதி ரெண்டு அண்ணனுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா போயிட்டாங்க. அக்காக்கு கல்யாணம் ஆயிடுச்சி , என்னுடைய தங்கச்சி தான் எங்க வம்சத்திலேயே அதிக படிப்பு படிச்சு இருக்கா… (பன்னிரண்டாவது வரை ) மற்ற யாருமே படிக்கலை …

கலெக்டருக்கு கூட படிச்சு பரிட்சை எழுதிடலாமுங்க ஆனா நான் மூணாவது வரைக்கும் படிக்கிறதுக்குள்ள எனக்கு நிறைய பேரு , நிறைய பரிட்சை வெச்சுட்டாங்க , அந்த வயசுல எனக்கு என்ன அண்ணா தெரியும்.

பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் கூட படிக்கும் பசங்க கூளையன் வந்துட்டான்னும் குட்டையன் வந்துட்டான்னு சொல்றதும், வெட்டியான் பையன் பக்கத்துல உட்காராதீங்கடானு ஒதுக்கி வைக்கிறதும் என்னால தாங்க முடியலைங்க.

அப்போவே நிறைய நாள் பள்ளிக்கூடம் போகாம கட் அடிச்சுட்டு ஊர் சுத்தி இருக்கேன். அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சமாதானப்படுத்தி படிக்க அனுப்புவாங்க. அங்க டீச்சருங்களே வெட்டியான் புள்ளைன்னு கூப்பிட்டு மனச காயப்படுத்த ஆரம்பிச்சதும் ஸ்கூல் புத்தகத்துக்கு எல்லாம் கொள்ளி வெச்சுட்டு இனி அந்த பக்கமே போக மாட்டேன்னு முடிவா சொல்லிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சேன்.

கொஞ்சம் பெரியவனானதும் , இல்லை இல்லை கொஞ்சம் வயசு அதிகமானதும் எங்க அப்பா சுடுகாட்டுல அவரோட ஒத்தாசையா வேலை பாத்துட்டு இருக்க சொன்னார். ஊர் சுத்தறேன்னு இந்த வேலை செய்ய வெச்சுட்டாங்க . ஆனா அங்கேயும் சவத்தை கொண்டு வரவங்க டேய் குட்டையா இங்க வாடான்னும் வெட்டியான் இங்க வாடான்னு வார்த்தை கடப்பாரையால் குத்திட்டு இருந்தாங்க .

வெறுப்பாகி , அப்பா இந்த வேலை எனக்கு வேணாம். வேற ஏதாச்சும் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு வேலை தேட போனேன் , யார்கிட்டேயும் நான் மயானத்துல வேலை செய்யறவன்னு சொல்லாம வேலை கேட்டேன் . ஆனா என்னுடைய உயரத்துக்கு எங்கேயும் யாரும் வேலை கொடுக்கலை , அப்படியே மனசு வந்து ஒரு சிலர் வேலை கொடுத்தாலும் உயரம் பத்தாததால என்னால வேலை செய்ய முடியல …

ஒரு கட்டத்துல அப்பா எங்கேயோ காணாம போயிட்டாரு , எங்கே தேடியும் கிடைக்கவே இல்லை , மயானத்தில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்துல தான் எங்க குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு . இப்போ அவரு இல்லாம போனதால , வேற வழியே இல்லாம குடும்பத்துக்காக இந்த வேலை செய்ய ஆரம்பிச்சு இதோட 15 வருஷம் ஆகிடுச்சு மனசும் உடம்பும் நிறைய காயம் பட்டு பட்டு மரத்து போச்சு . எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு பார்த்தாங்க , ஆனா இந்த வேலை செய்யும் எங்க குடும்பத்துக்கு நல்லது கெட்டதுக்கு கூட பத்திரிகை வைக்க மனசு வராதவங்க எனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முன் வருவாங்க . கல்யாணம் எல்லாம் கற்பனை தான் அதை விடுங்க அண்ணா.

இன்னைக்கு வரைக்கும் யாருமே என் பெயரை சொல்லி கூப்பிட்டதே இல்லைன்னு நினைக்கிறேன் .., சவத்தை எடுத்து வர்ர சொந்தக்காரங்க சவத்துக்கு குழி போட்ட கூலியை கூட தூக்கி தான் போடுவாங்க , நான் ஏன்னு கேட்டா அது தான் முறைனு சொல்லுவாங்க , அதுக்கு பிறகு வெட்டியான் குட்டையான்னு வேற கூப்பிடுவாங்க பாருங்க.. அப்பல்லாம் ஊனம் எனக்கா இல்லை அவங்களுக்கான்னு மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன். ( ஆனா அவரை பார்க்கும் போது சிரிக்கிறது மாதிரி எல்லாம் தெரியலைங்க )

எவ்வளவோ பேர் என் மனசை காயப்படுத்தினவங்களுக்கும் கூட நான் சவக்குழி போட்டு இருக்கேன் , அப்போல்லாம் அவங்க மேல எனக்கு எந்த கோபமோ காழ்ப்புணர்ச்சியோ வந்ததில்லைங்க . இப்போ எல்லாம் இந்த தொழிலை நான் தெய்வமா மதிச்சு செய்துட்டு இருக்கேன் , ஆனா ஒருத்தரும் என்னை மனுசனா கூட மதிக்கிறது இல்லையேன்னு மனசோட ஏதோ ஒரு மூலைல அழுதிட்டு தான் இருக்குன்னு..” கண் கலங்கிட்டே சிரிச்சாரு பாருங்க . எனக்கு இதயத்துல இருந்து அவ்வளவு வலி வந்துருச்சு.

இவரு உயரம் மூன்றடி தான் ஆனா நமக்கெல்லாம் ஆறடி தேடி கொடுக்குறதே இவர் தாங்க . என்ன தான் , கோட்டையில கொடி கட்டி பறந்தாலும் என்னைக்காவது ஒரு நாள் இவரிடம் தானே சரணாகதி ஆகப்போறாங்க …

அரிச்சந்திரன் இதே மயானத் தொழில் செய்தாலும் அவரை இன்றளவும் கொண்டாடும் இந்த சமுதாயம் தான் இவரைப் போன்றோரை மனதளவில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது… என்னைக்கு தான் திருந்த போகிறார்களோ இந்த நடமாடும் சவங்கள் ..??

நேர்காணல்: ஈரநெஞ்சம் மகேந்திரன், கோவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top