Close
செப்டம்பர் 20, 2024 5:40 காலை

கடந்த 75 ஆண்டுகளாக புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள் மீது தனி கவனம் தேவை: முதல்வருக்கு கோரிக்கை

புதுக்கோட்டை

தமிழக முதல்வருக்கு நகர் நல இயக்கம் கோரிக்கை

கடந்த 75 ஆண்டுகளாக புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள் மீது தனி கவனம் தேவை என தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டை நகர் நல இயக்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை நகர் நல இயக்க ஒருங்கிணைப்பாளர் ரா. சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கை:

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது.  தமிழ்நாட்டில் பல முதலமைச்சர்களின் தலைமையில் பல அரசுகள் பொறுப்பேற்று நடந்து வந்திருக்கின்றன. ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு  வருகிறது.

எல்லா பட்ஜெட்களிலும் சென்னை மற்றும் வடக்கு மாவட்டங் களும் மேற்கு மாவட்டங்களும்  மட்டுமே அதிக பயன் பெற்றிருக்கின்றன.

தெற்கு மாவட்டங்கள்  தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது. இது திட்டமிட்ட நிகழ்வா என்ற சந்தேகமும்  தென் மாவட்ட மக்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போலவே நடத்தப்பட்டு வருவதாக மக்கள் மனதில் எண்ணம் தோன்றி மறைகிறது.

மாநிலத்தின் எல்லா மாவட்டங்களையும் ஒரே மாதிரியாக சமநிலைப்படுத்துவது  முதலமைச்சரின் கடமையாகும். எனவே, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை,
தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தெற்கே உள்ள 19 மாவட்டங்களைத் தனியாக ஒதுக்கி தென் மாவட்டங்கள் வளர்ச்சித் துறை என்ற புதிய துறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்கி, துணை முதலமைச்சர் என்ற தகுதியை ஏற்படுத்தி தென்மாவட்டங்கள் வளர்ச்சித் துறை  என்ற  பொறுப்பை வழங்க வேண்டும்.

அப்போதுதான் உங்கள் காலத்திலாவது தென் மாவட்டங்கள் மற்ற வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை போல வளர்ச்சி அடையும்.எனது இந்தக் கோரிக்கையை தாமதமின்றி  பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top