ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 ஆவது பாரதி விழா ஈரோடு யூஆர்சி பள்ளி அரங்கில் (11.12.2022) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம். மயிலானந்தன் தலைமை வகித்தார். பேரவைத் தலைவர் த ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுகவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் வள்ளலாரின் 200 -ஆவது ஆண்டையொட்டி வள்ளலார் திருவுருவப்படம் காந்திகிராமம் நிகர்நிலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ந. மார்க்கண்டன் திறந்து வைத்தார். பேராசிரியர் வள்ளலார் பற்றி உரை நிகழ்த்தினார்.
ரூ 25,000 பொற்கிழியுடன் கூடிய 2022 -ஆம் ஆண்டிற்கான மக்கள் சிந்தனைப் பேரவையின் ‘ பாரதி விருது‘ சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் விருதாளர் பேராசிரியர் மணிகண்டனுக்கு வழங்கி விழாச் சிறப்புரையாற்றினார்.
விருதாளர் பேராசிரியர் ய. மணிகண்டன் தனது ஏற்புரையில் பாரதியியல் ஆய்வு வரலாறு பற்றியும் பாரதியலுக்கான தனது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பங்களிப்பு குறித்தும் விரிவாகப் பேசினார்.
முன்னதாக மாலை 4 மணிக்கு பாரதி இறுதிப் பேருரை நிகழ்த்திய கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பேரவை சார்பில் ‘ பாரதி ஜோதி ‘ ஏந்திய மாணவர் அணிவகுப்பு நடைபெற்றது. ஈரோட்டின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அணிவகுப்பு விழா அரங்கின் முகப்பில் நிறைவு பெற்றது.
பாரதி ஜோதி அரங்க முகப்பில் விருதாளரிடம் அளிக்கப்பட்டது. விருதாளர் சிறிது தூரம் ஜோதியை ஏந்தி வந்து மேடையருகே அமைந்திருந்த பாரதி படத்தின் முன்பு நட்டு வைத்தார்.
விழாவின் தொடக்கமாக பேரவையின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் க. வெற்றிவேல் வரவேற்புரையாற்றினார். நிறைவாக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் வி. பொன்னுசாமி நன்றியுரை நிகழ்த்தினார்.
விழாவில் பார்வையாளர்களாக ஊர்ப் பிரமுகர்கள் பலரும் வெளி மாவட்ட அன்பர்களும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்றனர்.