Close
நவம்பர் 22, 2024 5:07 மணி

நகராட்சி மூலம் உணவகங்களில் சேரும் குப்பைகளை அகற்ற வேண்டுமென உணவக உரிமையாளர்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோடை நகராட்சியில் ஆணையர் நாகராஜன் தலைமையில் நடந்த மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளுவதை நிறுத்தப் போவதாகாவும், சம்பந்தப்பட்ட  உணவகங்களே அவரவர் குப்பைகளை அவரவர்களே அள்ளி அப்புறப்படுத்த வேண்டும் என்ற முடிவை கைவிட்டு,  வழக்கம் போல உணவகங்கள், கேண்டீன்களில் சேரும் கழிவுகளை அப்புறத்த வேண்டுமென மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக நகராட்சி தலைவர், துணைத் தலைவர், மற்றும் நகராட்சி உறுப்பினர்களுக்கு, மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆணையர் நாகராஜனிடம் அளித்த கோரிக்கை மனு:

நம் நகரத்தையும், தெருக்களையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சுகாதாரத்தையும் பேணி காக்க வேண்டும், என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அரசாங்கத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் எங்கள் சங்கம் முழு உத்துழைப்பு நல்கி வருகிறது.

மேலும் தொடர்ந்து நல்லாதரவு கொடுப்பதை கடைமையாக கருதுகிறது. பல ஆண்டுகளாக, எங்கள் நிறுவனங்களில் அன்றாடம் சேர கூடிய குப்பைகள் மற்றும் இலைகளை இதுநாள் வரை நகராட்சி நிர்வாகம் தான் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி  வந்துள்ளது.

அதற்கு நாங்கள் மாதம்தோறும்  டீ கடைகள், கேண்டீன் களுக்கு ரூ.100/- வீதமும் ஹோட்டல்களுக்கு ரூ. 500/ வீதமும் கட்டணம் செலுத்தி வருகிறோம்.

தற்போழுது திடீரென்று, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளுவதை நிறுத்துவதாகாவும், எங்கள் நிறுவனங்கள் அவரவர் குப்பைகளை அவரவர்களே அள்ளி அப்புறபடுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.

எங்கள் ஹோட்டல் தொழில் இரவு பகல் இல்லாமல் உழைக்க கூடிய ஒய்வு இல்லாத தொழில். நாங்களே குப்பைகளையும் அப்புறபடுத்துவது என்றால் எங்களால் ஹோட்டல் தொழில் நடத்த முடியாது. மேலும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு சேர்த்து தான் எங்களிடம் சொத்து வரி மற்றும் லைசென்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதற்கு மேலும் நாங்கள் மிகவும் சிரமத்துடன் தான் குப்பை அள்ளுவதற்குபணம் செலுத்தி வருகிறோம். எங்களுக்கும், விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாக செலவு கூடிக் கொண்டே போகிறது தொழில் நடத்துவதே லாபகரமாக இல்லை. ஆனாலும் விடமுடியாமல் நடத்தி வருகிறோம்.

ஆகவே குப்பை கட்டணத்தை, டீ கடை மற்றும் கேண்டீன் களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300/- வீதமும், ஹோட்டல்களுக்கு 750/- வீதமும் வாங்கி கொண்டு, தொடர்ந்து குப்பைகளை அள்ள உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆரம்பத்தில், குப்பை அள்ள வரும் நகராட்சி லாரிகளில் நான்கு ஐந்து உதவியாளர்கள் வந்து எடுத்து சென்று வந்தார்கள், ஆனால் தற்பொழுது ஒரே ஒரு உதவியாளர் மட்டும் தான் வருகிறார். குப்பை லாரி வரும் சமயம் எங்கள் நிறுவனங்களில் வேலையாட்கள் இல்லாமலிருந்தால், குப்பையை லாரியில் அள்ளிக் கொட்ட முடியவில்லை. ஆகவே முன்பு போலவே குப்பை லாரிகளில் போதிய அளவு பணியாட்களை நியமித்து  துப்புரவுப்பணியை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எங்கள் உறுப்பினர்களுக்கு லைசென்ஸ் பணம் பெற்றுக் கொண்டு, உரிய ரசீது வழங்கப்படவில்லை என்று புகார் வந்துள்ளது. அதையும் விசாரித்து, பணம் கட்டியவர்களுக்கு உரிய ரசீது வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுகை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் நாகராஜன் தலைமையில்   நகர்மன்ற துணைத்தலைவர் எம். லியாகத்அலி,  நகர்மன்றத்தலைவர் திலவதி சார்பில் திமுக செயலர் ஆ. செந்தில் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில், வழக்கம் போல உணவகங்களில் சேரும் குப்பைகளை அகற்றுவது,  இரவு 10 மணியளவில் லாரிகள் மூலம் அகற்றுவது அதற்காக உணவங்கள் சார்பில் தற்போது உயர்த்தி வழங்கப்படும் கட்டணங்களை பெற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இதில், உணவக உரிமையாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் சண்முகபழனியப்பன்,  செயலாளர் கே.ஜி. ராஜா, பொருளாளர் ஆர். ஜெகதீசன்,  கார்த்திக்மெஸ் மூர்த்தி, சரவணபவன் ஆதித்தன், முத்துப்பிள்ள கோண்டீன்  கர்ணன், பிரபுகேண்டீன் பன்னீர்செல்வம், நகர் மன்ற உறுப்பினர்கள் என். சாத்தையா, வேங்கைஅருணாசலம், டி. அப்புக்காளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top