சாத்தாங்காடு ஒருங்கிணைந்த இரும்பு விற்பனை அங்காடி நவீனமயமாக்கப்படும் என்றார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் அமைந்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இரும்பு அங்காடி மையத்தில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் மேம்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் பி .கே. சேகர்பாபு தெரிவித்தார்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு அங்காடிகள் மையத்தை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி. கே .சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாதிரி வரைபடம், சாலைகள், கட்டமைப்பு வசதிகள் குறித்து இதன் நிர்வாக அலுவலர் பரிதாபானு அமைச்சரிடம் விளக்கினார்.
ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் செயல்பட்டு வந்த இரும்பு வணிக கடைகளை இடமாற்றம் செய்யும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் 203 ஏக்கர் பரப்பளவில் ரூ.17 கோடி செலவில் திருவொற்றியூர் சாத்தாங்காடு ஒருங்கிணைந்த இரும்பு விற்பனை அங்காடி 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையாக இந்த அங்காடி முழுமையாக வளர்ச்சி பெறவில்லை. இதனால் இன்னும் கூட ஜார்ஜ் டவுன் பகுதியில் இரும்புக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்படி 850 மனைகள் ஏற்படுத்தப்பட்டு இதில் 719 மனைகள் வணிகர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 131 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. 184 பேர் ஒதுக்கீடு பெற்ற பின்பும் விற்பனை பத்திரங்கள் செய்யாமல் உள்ளனர். அவர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படும். தவறும் பட்சத்தில் அவர்களுக்கான ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும்.
இந்த மையத்தில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சேதமான நிலையில் காணப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகளும் போதுமான அளவில் இல்லை.
இது குறித்து இங்கு செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டதன் அடிப்படையில் இங்கு மழை நீர் வடிகால், அவசரகால மருத்துவமனை, வாகனங்கள் பழுதுபார்க்கும் மையம், எலக்ட்ரானிக் எடை மேடை, துணைமின் நிலையம், உணவகங்கள், வாகன ஓட்டுநர்கள், ஓய்வு அறைகள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அங்காடி பகுதியில் மாநகர பேருந்து நிலையம் ஒன்றையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ல் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும். இப்பணிகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் முற்றிலுமாக பணிகள் முடிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட அதிநவீன இரும்பு அங்காடியாக இருக்கும்.
வடசென்னை பகுதியில் இருந்து விரைவில் திறக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நீண்டதொலைவில் இருப்பதால் இப்பகுதி மக்கள் பயணம் செய்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை உள்ளதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பயணிகள் அதிக சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் அரசு மேற்கொள்ளும். குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் வரை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் வடசென்னை மக்கள் பயன்பெறும் வகையில் திருவொற்றியூர் பகுதியில் வெளியூர் துணை பேருந்து நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
வரிசையில் நிற்கும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாத்தாங்காடு பகுதியில் கட்டணம் செலுத்தி கண்டெய்னர் லாரிகளை நிறுத்துவதற்கு முன்பு அனுமதிக்கப்பட்டது. ஆனால் இனி இரும்பு விற்பனை அங்காடிகளுக்கு வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அதேநேரம் கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி வைப்பதற்காக மிகப்பெரிய அளவிலான வாகன நிறுத்த முனையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் முதல் இரண்டு விரிவான திட்ட அறிக்கையில் (மாஸ்டர் பிளான்) குறிப்பிட்டிருந்த திட்டங்களே இன்னும் முற்றிலுமாக முடிக்கப்படவில்லை. எனவே மூன்றாவது விரிவான திட்ட அறிக்கை 2026 -ஆம் ஆண்டுதான் செயல்பாட்டிற்கு வரும் என்றார் சேகர்பாபு .
ஆய்வின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம் (மாதவரம்), கே. பி.சங்கர் (திருவொற்றியூர்), சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, நிர்வாக அலுவலர் பரிதாபானு, மண்டல குழு தலைவர்கள் தி.மு. தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், எண்ணூர் காவல் உதவி ஆணையர் பிரம்மானந்தம், திமுக மேற்கு பகுதி செயலாளர் ம.அருள்தாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.